அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்

வழக்கறிஞராக மட்டுமல்லாமல் பத்திரிகையாளராகவும் பணியாற்றும் அலெஹாண்ட்ரா ரோட்ரிகஸ் மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

Update: 2024-04-27 08:30 GMT

அழகிப் போட்டிகள் என்றாலே இளமையும் துடிப்பும் கொண்ட பெண்களின் களம் என்றுதான் பெரும்பாலானோர் எண்ணுகின்றனர். ஆனால் அர்ஜென்டினாவின் தலைநகர் பியூனஸ் அயர்ஸில் நடந்த மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் அந்த வழக்கத்தை உடைத்திருக்கிறார் 60 வயதான ஒரு வழக்கறிஞர். வழக்கறிஞராக மட்டுமல்லாமல் பத்திரிகையாளராகவும் பணியாற்றும் அலெஹாண்ட்ரா ரோட்ரிகஸ் (Alejandra Rodríguez) இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

வரலாற்றில் ஒரு திருப்புமுனை

18 முதல் 73 வயதுடைய 34 போட்டியாளர்களிடையே நடந்த இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம், வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியிருக்கிறார் அலெஹாண்ட்ரா. அழகிப் போட்டிகள் என்று வரும்போது இளமை, நடை, உடை என்பன மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுகின்றன. பொதுவாக வயதான பெண்கள் பங்கேற்பதற்கு வாய்ப்புகள் இல்லாமலேயே இருந்தன. ஆனால் இந்த நிலை மாறியிருப்பது ஒரு வரவேற்கத்தக்க விடயமே. வரையறுக்கப்பட்ட வட்டத்திற்குள் பெண்களின் அழகைச் சுருக்கிய காலம் இனி மலையேறத் தொடங்கியிருக்கிறது.

உற்சாகமூட்டும் அலெஹாண்ட்ரா

மிஸ் பியூனஸ் அயர்ஸ் பட்டம் சூடிய பின்னர் பேசிய அலெஹாண்ட்ரா, அழகிப் போட்டிகளுக்கு ஒரு புதிய வடிவம் கிடைத்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தார். "அழகிப் போட்டியில் உடல் அழகு மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவதில்லை, பிற திறமைகளும் பார்க்கப்படுகின்றன" எனத் தெரிவித்தார். இவரின் இந்த வெற்றி, பல்வேறு துறைகளில் சாதிக்கும் வயதான பெண்களுக்கு மேலும் உத்வேகத்தை அளிப்பதாக அமைந்திருக்கிறது

அலெஹாண்ட்ரா ஒரு பல்துறை வித்தகர். சட்டத்திலும் பத்திரிகையிலும் தனக்கென நிலையான இடத்தை அவர் பிடித்திருக்கிறார். லா பிளாட்டாவை பூர்வீகமாகக் கொண்ட இவர், திரைப்படத் துறையிலும் ஈடுபாடு கொண்டிருக்கிறார்.

அழகிற்கு வயது தடையில்லை

அழகிப் போட்டிகள் என்றதும் பெரும்பாலானவர்களின் நினைவுக்கு வருபவை பேரழகிகள் தான். இந்த எண்ணத்தை உடைத்தெறிந்து, எல்லா வயதினரும் பங்கேற்கலாம், அழகு என்பது பல வடிவங்களில் வெளிப்படும் என்பதை உலகுக்கு உணர்த்தியிருக்கிறது பியூனஸ் அயர்ஸ் அழகிப் போட்டி.

அழகிப் போட்டிகளின் புதிய சகாப்தம்

அழகிப் போட்டிகள் வணிக நோக்கத்துடன் நடத்தப்படுகின்றன என்ற விமர்சனங்கள் ஒருபுறம் இருந்தாலும், அது பல பெண்களுக்கு தங்களது திறமையையும் ஆளுமையையும் வெளிக்கொணர ஒரு களமாக அமைந்திருக்கிறது. அண்மைக் காலங்களில் அழகிப் போட்டிகளில் பல முன்னேற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. அந்த வகையில் அலெஹாண்ட்ராவின் வெற்றி ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாக அமைந்திருக்கிறது. சமூக ஊடகங்களில் ஏராளமானவர்கள் இவரது வெற்றியைப் பாராட்டியுள்ளனர்.

எதிர்காலப் போக்கு

மிஸ் அர்ஜென்டினா பட்டத்திற்காக அலெஹாண்ட்ரா அடுத்ததாகப் போட்டியிடவிருக்கிறார். மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியிலும் பங்கேற்கும் வாய்ப்பு இவருக்குக் கிடைக்கும். பல்வேறு தளங்களில் சாதனை புரியும் வாய்ப்பு இருப்பதால், அவரது செயல்பாடுகள் பலராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகின்றன.

மரபுகளை மீறி, வரையறைகளைத் தகர்த்தெறிபவர்களே சரித்திர நாயகர்களாகின்றனர். அந்த வகையில் அலெஹாண்ட்ரா ரோட்ரிகஸ் அவர்களுக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தில் கிடைக்கும் வெற்றிக்காகக் காத்திருப்போம்.

Tags:    

Similar News