வங்கதேச வன்முறை: பின்னணியும் காரணமும்
வங்கதேசத்தில் மாணவர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவர்களுக்கு இடையே மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது.
அரசுப் பணிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவர்கள், பாதுகாப்பு படையினர் மற்றும் அரசுக்கு ஆதரவாக செயல்படுவர்களுக்கு இடையே மிகப் பெரிய வன்முறை வெடித்துள்ளது.
போராட்டத்துக்கான காரணம் என்ன?
பாகிஸ்தானுக்கு எதிராக வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணிகளில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஆளும் அவாமி லீக் கட்சி முடிவெடுத்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வங்கதேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதால், இந்த இடஒதுக்கீடு பாரபட்சமானது எனக் கூறி போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த இடஒதுக்கீட்டுக்குப் பதிலாக திறமையின் அடிப்படையில் அரசுப் பணிகள் நிரப்பப்பட வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
நாடு முழுவதும் கடையடைப்பு மேற்கொள்ளப்படும் எனவும், அத்தியாவசியத் தேவைகளுக்கான கடைகளை தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் முழுவதுமாக மூடப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுவரை நடந்தது
ஆயிரக்கணக்கான மாணவர்கள் வீதிகளில் இறங்கி அரசின் இடஒதுக்கீட்டு முடிவுக்கு எதிரான போராடத் தொடங்கிவிட்டனர். டாக்கா பல்கலைக் கழகத்தில் காவல் துறை மற்றும் ஆளும் அவாமி லீக் அரசுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் அரசின் இடஒதுக்கீட்டு முடிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே கடந்த திங்கள் கிழமை பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை நாடு முழுவதும் மிகப் பெரிய பதற்றத்தை ஏற்படுத்தியது. வன்முறை வெடித்ததில் 100-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.
மறுநாள் தொடர்ந்த வன்முறையில் 6 பேர் கொல்லப்பட்டனர். அடுத்த நாள்களில் நாடு முழுவதும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன. நாட்டின் முக்கிய நகரங்களில் துணை ராணுவப் படை குவிக்கப்பட்டது. வன்முறையில் 19 பேர் உயிரிழந்ததாக ஊடகங்கள் தெரிவித்தன. அதன் விளைவாக, மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் வன்முறை முடிவுக்கு வரும் வரை பல்கலைக் கழகங்கள் காலவரையறையின்றி மூடப்படுவதாக முக்கிய பல்கலைக் கழகங்கள் பலவும் அறிவித்தன.
பல்கலைக் கழங்கள் மூடப்படுவதாக அறிவித்தபோதிலும், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தங்களது போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருப்பதாகவும் அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி அவர்களை கலைக்க முயற்சித்ததால் போராட்டம் வன்முறையாக வெடித்தாக ஊடகங்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகள் இருப்பினும், பலரும் அரசு வேலைக்கு செல்வதையே விரும்புகின்றனர். வேலை உத்தரவாதம் மற்றும் அரசு வேலையில் கிடைக்கும் சலுகைகள் போன்றவையே அவர்கள் அரசு வேலையைத் தேர்ந்தெடுக்க மிக முக்கியக் காரணம்.
பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சிறுபான்மையினர் ஆகியோருக்கு அரசு வேலையில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், மேற்கண்டவர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதற்கு மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அரசின் நிலைப்பாடு என்ன?
நாட்டின் விடுதலைக்காக போராடியவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக பிரதமர் ஷேக் ஹசீனா பேசியுள்ளார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு சுதந்திரம் பெற்றுத் தந்தவர்கள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்க வேண்டும் என ஹசீனா தெரிவித்துள்ளார்.
மேலும், மாணவர்கள் போராட்டத்தை எதிர்க்கட்சிகளான வங்கதேச தேசிய கட்சி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி ஊக்கவிப்பதாக அவர் குற்றம்சாட்டினார். மாணவர்களின் நாடு தழுவிய கடையடைப்பு போராட்டத்துக்கும் எதிர்க்கட்சிகள் உதவி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மாணவர்கள் போராட காரணம்
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசுப் பணியில் 30 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க ஷேக் ஹசினா தலைமையிலான அரசு கடந்த 2018 ஆம் ஆண்டே முடிவு செய்தது. அந்த சமயத்தில் மிகப் பெரிய மாணவர்கள் போராட்டத்தை சந்திக்க நேர்ந்ததால், அரசு இந்த இடஒதுக்கீட்டு முடிவை கிடப்பில் போட்டது.
இருப்பினும், அண்மையில் இந்த இடஒதுக்கீடு வழக்கில் உயர்நீதிமன்றம் சுதந்திரப் போராட்ட வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கியது மாணவர்களை போராட்டத்தில் குதிக்கச் செய்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்து, வழக்கை ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. உயர்நீதிமன்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தபோதிலும், போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிடுதாக தெரியவில்லை.
இந்த தீர்ப்பு, இடஒதுக்கீடு செய்யப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை அனைத்து பதவிகளிலும் 56 சதவீதத்தில் இருந்து ஏழு சதவீதமாக குறைத்தது, ஆனால் எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை மாணவர்கள் பொறுமைகாக்க வேண்டும். மாணவர்களுக்கு உச்சநீதிமன்ற தீர்ப்பில் நீதி கிடைக்கும் என நம்புகிறேன். மாணவர்கள் ஏமாற்றமடைய மாட்டார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
அடுத்து என்ன?
வங்கதேசத்தில் வெடித்துள்ள இந்த வன்முறை அந்த நாட்டின் நிர்வாகத் திறன் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர்கள் பலரும் வேலைவாய்ப்பில்லாமல் திண்டாடுவதை இந்தப் போராட்டம் அப்பட்டமாக படம் பிடித்துக் காட்டுகிறது. அரசு வேலைக்கான தேர்வுகளில் ஏற்படும் குளறுபடி மற்றும் ஊழல் ஆகியை இளைஞர்களை மேலும் வேதனைக்கு ஆளாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும்போதிலும், வேலைவாய்ப்புகள் ஏதும் உருவாக்கப்படவில்லை என்பது மாணவர்களின் மனக் குமுறலாக இருக்கிறது.
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றால் மட்டுமே வன்முறை ஓய்ந்து வங்கதேசத்தில் அமைதி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் மயமாக்கப்பட்ட அரசாங்க வேலைகளுக்கான நுழைவு ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம், இந்த வாரம் பிரதம மந்திரி ஷேக் ஹசீனாவின் பதவிக்காலத்தில் மிக மோசமான அமைதியின்மையாக மாறியது.
கலகத்தடுப்பு காவலர்கள் ஒழுங்கை மீட்டெடுக்கத் தவறியதை அடுத்து, வங்காளதேசம் முழுவதும் உள்ள நகரங்களில் ராணுவ வீரர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர், அதே நேரத்தில் நாடு தழுவிய இணைய முடக்கம் வெளி உலகிற்கு தகவல் பரவுவதை கடுமையாக தடை செய்துள்ளது.
இந்த வழக்கில் தொடர்புடைய வழக்கறிஞர் ஷா மோஞ்சுருல் ஹொக், கூறுகையில் நீதிமன்றம் தனது தீர்ப்பை வெளியிட்ட பிறகு போராட்ட மாணவர்களை "வகுப்புக்குத் திரும்ப" வேண்டும் என்று கூறினார்.
ஆனால் பெருகிவரும் அடக்குமுறை மற்றும் அதிகரித்து வரும் இறப்பு எண்ணிக்கைக்குப் பிறகு, நீதிமன்றத்தின் தீர்ப்பு பொதுமக்களின் கோபத்தைத் தணிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும்.