நடுவானில் குலுங்கிய ஏர் யூரோப்பா விமானம்: 40 பயணிகள் காயம்
நடுவானில் ஏர் யூரோப்பா விமானம் குலுங்கியதால் 40 பயணிகள் காயமடைந்தனர்.;
ஸ்பெயின் நாட்டிலிருந்து தென் அமெரிக்காவின் உருகுவேவுக்கு சென்ற ஏர் யூரோப்பா போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானம் ஒன்று நடுவானில் குலுங்கியதால் அதில் பயணித்த 40 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து, அவசரமாக விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் நேற்று (திங்கட்கிழமை) நடந்துள்ளது. இதையடுத்து பிரேசில் நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது. இதனை ஏர் யூரோப்பா மற்றும் விமான நிலைய தரப்பும் உறுதி செய்துள்ளது. விமானம் வானில் நடுக்கம் ஏற்பட்டபோது அருகாமையில் இருந்த விமான நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் காயமடைந்துள்ள பயணிகளில் 30 பேருக்கு விமான நிலையத்திலேயே அவர்களுக்கு வேண்டிய மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டன. மீதமுள்ள 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதுகாப்பு கருதி விமானம் பிரேசில் நாட்டில் தரையிறக்கப்பட்டது என்பதை ஏர் யூரோப்பா தெரிவித்துள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள மாட்ரிட் நகரில் இருந்து புறப்பட்ட ஏர் யூரோப்பா போயிங் 787-9 ட்ரீம்லைனர் விமானத்தில் 325 பேர் பயணம் செய்ததாகவும், இந்த விமானம் போயிங் 787-9 ட்ரீம்லைனர் ரகத்தை சார்ந்தது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பயணிகள் அனைவரும் மாற்று விமானத்தில் உருகுவே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஏர் யூரோப்பா விமான நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தின் வீடியோ காட்சிகளை பயணிகள் சிலர் இணையதளத்தில் பகிர்ந்துள்ளனர். அதில் பயணி ஒருவர் தலைக்கு மேல் இருக்கும் கம்பார்ட்மெண்ட் பகுதியில் சிக்கியிருந்த காட்சி வைரலாகியுள்ளது.
இதேபோல் கடந்த மே மாதத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று நடுவானில் குலுங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் பயணிகள் பலர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் கூறுகையில், ஒரு கணத்திலிருந்து அடுத்த கணம் வரை, விமானம் நிலைகுலைந்து மூழ்கியது. சீட் பெல்ட் இல்லாதவர்கள் காற்றில் பறந்து மேல் இருக்கும் கம்பார்ட்மெண்ட் பகுதியில் சிக்கிக்கொண்டனர். இதனால் அவர்கள் காயமடைந்தனர். சீட் பெல்ட் ஏராளமானோர் அணியவில்லை என்று கூறினார்.
இதுகுறித்து உள்ளூர் மருத்துவக் குழு பிரேசிலிய ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில், பயணிகள் சிலருக்கு மண்டை எலும்பு முறிவு மற்றும் முகத்தில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.