மாஸ்கோவில் இசை விழாவில் தீவிரவாதிகள் தாக்குதல்! என்ன நடந்தது?
மாஸ்கோவில் இசை விழாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 60 பேர் உயிரிழந்தனர், 145 பேர் வரை படுகாயம் அடைந்தனர்;
இசைவிழா (கோப்பு படம்)
ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் நடந்த வன்முறையில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு வீசியதில் 60 பேர் வரை உயிரிழந்தனர். மேலும், இந்த தாக்குதலில் 145 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
நேற்று வெள்ளிக்கிழமை இசை அரங்கு ஒன்றில் நுழைந்த ஐந்து மர்ம நபர்கள் அங்கு நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தவர்கள் மீது திடீரென துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகளை பயன்படுத்தி திடீர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த கொடூர தாக்குதல் காரணமாக, அந்நகரமே போர்க்களம் போல காட்சியளித்து வருகிறது. மேலும், இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அண்மையில் ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில் 87 சதவீதம் வாக்குகள் வித்தியாத்தில் விளாடிமின் புதின் வெற்றி பெற்றார். இதன் மூலம் அவர், அந்நாட்டின் அதிபராக ஐந்தாவது முறையாகும். இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் உள்ள ஒரு மிகப்பெரிய இசை கச்சேரி நடத்தும் அரங்கின் உள்ளே நுழைந்த சிலர் அங்கு திடீரென துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டனர். மேலும், வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இசை விழாவில் பங்கேற்றிருந்த பலரும் கொல்லப்பட்டனர்.
மாஸ்கோ நகரின் மேற்கு பகுதியில் உள்ள 6,200 பேர் வரை பங்கேற்கக்கூடிய அளவில் மிகப்பெரிய இசை அரங்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுவரை சுமார் 60 பேர் வரை இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும், சுமார் 145-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதில், ஐந்து குழந்தைகள் உள்பட 115 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தாக்குதலினால் ஏற்பட்ட நெருப்பால், இசை அரங்கு முழுவதும் எரிந்துபோனது. இதனையடுத்து அப்பகுதி முழுவதும் கரும்புகையாக காட்சியளித்தது. தகவலறிந்து பல்வேறு பகுதிகளில் இருந்து சம்பவ இடத்திற்கு பல தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதனிடையே, ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.
மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலை நடத்தியதற்காக இஸ்லாமிய அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உக்ரைன் போரின் தாக்கம் நாட்டில் குறையாத நிலையில், இந்த சம்பவம் நாட்டில் பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாக மாஸ்கோ நகரின் மேயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.