பலுசிஸ்தான் மாகாணத்தில் அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு: 26 பேர் உயிரிழப்பு
பாகிஸ்தானில் நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பலுசிஸ்தானில் வேட்பாளர் அலுவலகத்திற்கு வெளியே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டனர்;
பலுசிஸ்தானில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடம்
பாகிஸ்தானில் நாளை 8ம் தேதி பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று அடுத்தடுத்து 2 இடங்களில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன. கடந்த 1.5 வருட காலமாக அங்கு பல இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் பிஷின் என்ற இடத்தில , சுயேட்சை வேட்பாளர் அஸ்ஃபந்த்யார் கான் ககர் என்பவரின் அலுவலகத்திற்கு வெளியே ஒரு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது.
இதில், மொத்தம் 26 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இதுபற்றி போலீசார் கூறும்போது, பிஷின் பகுதியில் அஸ்பந்தியார் காக்கர் என்ற சுயேச்சை வேட்பாளரின் தேர்தல் அலுவலகம் வெளியே முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நடந்தது.
வேட்பாளர் காக்கர் தொகுதியிலும் மற்றும் பலூசிஸ்தான் சட்டசபை தொகுதிகளான பி.பி.-47 மற்றும் பி.பி.-48 ஆகிய தொகுதிகளில் இருந்தும் போட்டியிடுகிறார். இதேபோன்று முதல் குண்டுவெடிப்பு நடந்ததும், கீலா சைபுல்லா பகுதியில் மற்றொரு குண்டுவெடிப்பு நடந்தது.
இதற்கு முன் துணை ஆணையாளர், யாசீர் பஜாய் கூறும்போது, தேர்தல் அலுவலகத்திற்கு வெளியே நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 12 பேர் கொல்லப்பட்டனர் என கூறினார்.
"பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க செல்வதை தடுக்கும் வகையில்தான் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்த குண்டு, அலுவலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டு ஒரு "ரிமோட்" கருவியினால் இயக்கப்பட்டுள்ளது" என பலூசிஸ்தான் காவல் அதிகாரி அப்துல்லா ஜெஹ்ரி தெரிவித்தார்.
காயமடைந்த நபர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களில் பலரின் நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என டாக்டர் ஹபீப், கூறியுள்ளார்.
இதன் எதிரொலியாக குவெட்டாவில் உள்ள மருத்துவமனைகளில் அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் பணியாளர்களுக்கும் அழைப்பு விடப்பட்டது. இந்த தாக்குதல்களுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். அந்நாட்டில் தேர்தல் நடைபெற 24 மணிநேரம் கூட இல்லாத நிலையில், நடந்த இந்த தாக்குதல் மக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி அறிக்கை ஒன்றை அளிக்கும்படி, பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஆனது, பலூசிஸ்தான் தலைமை செயலாளர் மற்றும் ஐ.ஜி.யிடம் கேட்டுள்ளது.
"தேர்தல் அமைதியாக நடக்க பாதுகாப்பு பலப்படுத்தப்படும்" என பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய குண்டு வெடிப்பு சம்பவங்கள், பல காவல் அலுவலகங்கள், தேர்தல் பிரச்சார அலுவலகங்கள், பேரணிகள் என பலூசிஸ்தானின் பல பகுதிகளில் நிகழ்ந்தன.
குண்டு வெடிப்புகளில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் தூக்கியெறியப்பட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து நடைபெறும் இச்சம்பவங்களுக்கு பின்னணியில் பிரிவினைவாதிகளும், பயங்கரவாதிகளும் உள்ளதாக உள்துறை தெரிவித்தது.