ஜப்பானில் பனிப்பொழிவால் 2 விமானங்கள் மோதிக்கொண்ட விமான விபத்து

ஜப்பானில் பனிப்பொழிவின் காரணமாக 2 விமானங்கள் மோதிக்கொண்ட விமான விபத்து நடந்துள்ளது.

Update: 2024-01-16 17:17 GMT
ஜப்பானில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் சேதம் அடைந்த ஒரு விமானத்தின் இறக்கை பகுதி.

ஜப்பானில் 2 பயணிகள் விமானங்கள் மோதிக்கொண்டன. இதில் ஒரு விமானத்தின் இறக்கை இன்னொரு விமானத்தில் சிக்கி கொண்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக 300 பேர் உயிர் தப்பினர்.

தற்போது இந்தியா உள்பட பல நாடுகளில் குளிர்காலம் நிலவி வருகிறது. கனடா உள்பட பல நாடுகளில் பனியின் தாக்கம் அதிகம் உள்ளது. சில இடங்களில் பனி மழையாக கொட்டி வருகிறது. இதனால் விமான சேவைகள் என்பது அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகிறது.

காலை நேரத்தில் நிலவும் பனிமூட்டம் காரணமாகவும், மோசமான காலநிலையால் பல விமானங்கள் மாற்றி விடப்படுகின்றன. அதோடு சில விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஜப்பானும் விதிவிலக்கல்ல. ஜப்பானிலும் தற்போது கடும் குளிர் என்பது நிலவி வருகிறது.

இந்நிலையில் தான் ஜப்பான் வடக்கு பகுதியில் ஹோக்கைடோ தீவில் அமைந்து இருக்கும் நியூ சிடோஸ் விமான நிலையத்தில் விமானங்கள் புறப்பட தயாராக இருந்தன. கொரியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் என்பது 289 பயணிகள் மற்றும் விமான பணியாளர்களுடன் புறப்பட தயாராக இருந்தது. இந்த வேளையில் ‛டோவிங் கார்’ கொரியன் ஏர்லைன்ஸ் விமானத்தை பின்னோக்கி தள்ளி கொண்டிருந்தது. பனிப்பொழிவின் காரணமாக ஓடுபாதை என்பது ஈரமாக இருந்தது.

இந்த வேளையில் திடீரென்று அந்த விமானம் வேகமாக நகர்ந்ததோடு அதன் இறக்கை  அருகே நின்ற கேத்தே பசிபிக் ஏர்லைன்ஸ் விமானத்தின் இறக்கையுடன் பயங்கர சத்தத்துடன் உரசியது. இதையடுத்து உடனடியாக விமானம் நின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விமான விபத்தால் வேறு எந்த அசம்பாவிதங்களும் நடக்கவில்லை. விமான பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் என 300 பேர் பாதுகாப்பாக இருந்தனர்.

இதுபற்றி கொரியன் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் கூறுகையில், ‛‛கடும் பனிப்பொழிவுக்கு நடுவே விமானத்தை டோவிங் கார் தள்ளியதால் தான் இந்த விபத்து நடந்தது’’ என கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News