புதைபடிம ஆராய்ச்சி என்ற துறை உருவாக காரணமான மேரி அன்னிங் பிறந்த தினம்.
மேரி அன்னிங் 1799 ம் ஆண்டு மே 21 ம் தேதி பிறந்தார். 1847 ம் ஆண்டு மார்ச் 21 ம் தேதி மறைந்தார்.;
புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாக வழியமைத்துக் கொடுத்த இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர் மேரி அன்னிங் பிறந்த தினம் இன்று
இங்கிலாந்தின் டார்செட் நகரில் 1799 ம் ஆண்டு மே 21 ம் தேதி பிறந்தார். மேரி ஒரு வயது குழந்தையாக இருந்த போது, அவளை வைத்துக்கொண்டு மரத்தடியில் பக்கத்து வீட்டுப் பெண்கள் பேசிக்கொண்டிருந்தார்களாம்.
அப்போது மரம் தீப்பிடித்து எரிந்துள்ளது.அனைவரும் இறந்துபோக, மேரி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அதன்பிறகு தான் குழந்தையிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டதாகவும், சாதாரணமாக இருந்த குழந்தை புத்திசாலித்தனமாக மாறிவிட்டதாகவும் ஊர் மக்கள் நம்பினர்.
வறுமை காரணமாக மேரியால் முறையான கல்வி கற்க முடியவில்லை.தேவாலயத்தில் எழுதப் படிக்கக் கற்றாள். தந்தை மரச்சாமான்கள் தயாரிப்பவர். மற்ற நேரங்களில், புதைபடிமங்களை சேகரித்து அவற்றை சுற்றுலா பயணிகளிடம் விற்பார். சிப்பி, சங்குகளை சேகரிக்க, தந்தையுடன் மேரியும் செல்வாராம்.
அவளது 11-வது வயதில் தந்தை இறந்த பிறகு பண்டைய விலங்குகளின் எலும்புகள் உட்பட பல அரிய வகை தொல்படிமங்களை சேகரிப்பதில் மெல்ல மெல்ல மேரியும் நிபுணத்துவம் பெற்றார்.
பல முக்கியத்துவம் வாய்ந்த தொல்படிமங்களை கண்டறிந்துள்ளார். 1823-ல் முதன்முதலாக ப்ளிசியோசரஸ் என்ற அரிய விலங்கின் முழு எலும்புக்கூட்டை கண்டறிந்து அதோடு மடடுமில்லாமல். பறக்கும் ஊர்வன வகை டிராகான் எலும்பை 1828-ல் கண்டெடுத்தார்.
அடுத்த ஆண்டில் ஸ்கொலராஜா என்ற அரிய வகை மீனின் எலும்புக்கூட்டை தோண்டியெடுத்துள்ளார்.குறைவாகவே கல்வி கற்றிருந்தாலும், இரவல் வாங்கியே ஏராளமான நூல்களைப் படித்து. அதில் இருந்து முக்கியமான விவரங்களை குறிப்பு எழுதி வைத்துக்கொள்வாராம் தான் கண்டறிந்த தகவல்களையும் தொகுத்து எழுதுவாராம்.
புவி வரலாறு, பண்டைய உயிரினங்களின் வரலாறு குறித்து பல விஷயங்களைத் தெரிந்து வைத்திருந்தார். ஒரு எலும்புக்கூட்டை பார்த்தாலே, அது எந்த வகை உயிரினத்தை சேர்ந்தது என்று கூறும் அளவுக்கு நுட்பமான அறிவு கொண்டிருந்தார். அந்த காலகட்டத்தில் மக்கள் மத்தியில் புதைபடிமம் குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருந்தது. இவரது கண்டுபிடிப்புகளுக்குப் பிறகுதான், புதிதாக இதுதொடர்பான ஆராய்ச்சித் துறை உருவானது.
புதைபடிமங்களைத் தேடும் பணி உலகம் முழுவதும் தொடங்கியது. வறுமையால் பெரிய அளவிலான ஆராய்ச்சிகளில் இவரால் ஈடுபட முடியவில்லை. ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் புதைபடிவ ஆராய்ச்சியாளர்கள் பலர் இவரை சந்தித்து சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டனர். தான் சேகரித்த அரிய வகை சிப்பிகள், சங்குகள், ஏராளமான தொல்படிமங்களைக் கொண்டு ஒரு விற்பனை நிலையத்தை தொடங்கினார். மேரியை கவுரவ உறுப்பினராக டார்செட் கவுன்ட்டி மியூசியம் அங்கீகரித்தது.
புதைபடிம ஆராய்ச்சி என்ற புதிய அறிவியல் துறை உருவாகக் களம் அமைத்து தந்து, பழைய சரித்திரத்தை எதிர்வரும் தலைமுறைகள் அறிந்துகொள்ள வழியமைத்துக் கொடுத்த சாதனை மங்கையான மேரி அன்னிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, தனது 48-வது வயதில் 1847 ம் ஆண்டு மறைந்தார். அப்போது அவருக்கு வயது 48.