உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்க்க உலக தகவல் சமூக நாள் மே 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
உலக தகவல் சமூக நாள் என்று ஒவ்வொரு ஆண்டும் மே 17ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இது குறித்து அறிவிப்பு 2005 ம் ஆண்டு தூனிசில் நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாட்டை அடுத்து ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் மூலம் அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக பன்னாட்டுத் தொலைத்தொடர்பு ஒன்றியம் 1865ஆம் ஆண்டு இந்த நாளன்று நிறுவப்பட்டதைக் கொண்டாடும் விதமாக உலகத் தொலைத்தகவல் தொடர்பு நாள் என அறியப்பட்டு வந்தது.1973ஆம் ஆண்டு இதற்கான தீர்மானம் மாலேகா-டொர்ரெமோலினோசில் நடந்த முழு அதிகாரம் கொண்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
உலக தகவல் சமூக நாளின் முகனையான நோக்கம் உலகளவில் புதிய தகவல் தொழில்நுட்பங்களாலும் இணையத்தாலும் ஏற்பட்டுள்ள சமுதாய மாற்றங்களைக் குறித்த விழிப்புணர்ச்சியை வளர்ப்பதாகும். மேலும் இது எண்ணிம இடைவெளியைக் குறைப்பதற்கு உதவிடும் இலக்கையும் கொண்டுள்ளது.
நவம்பர் 2005 ம் ஆண்டு நடந்த தகவல் சமூகத்திற்கான உலக மாநாடு தகவல் தொலைத்தொடர்பு தொழில்நுட்பங்களின் (ICT) இன்றியமையாமை மற்றும் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட பல்வேறு எழுவினாக்களைக் குறித்துமான குவியத்தை ஏற்படுத்த மே 17ஆம் நாளை உலக தகவல் சமூக நாள் என்று அறிவிக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக்கு வேண்டுகோள் விடுத்தது. மார்ச்சு 2006 அன்று பொதுச்சபை அவ்வாறே தீர்மானம் (A/RES/60/252) நிறைவேற்றியது. முதல் உலக தகவல் சமூக நாள் மே 17, 2006ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.
நவம்பர் 2006 துருக்கியில் உள்ள அன்டால்யாவில் நடந்த பன்னாட்டுத் தொலைதொடர்பு ஒன்றியத்தின் முழு அதிகாரம் கொண்ட மாநாடு இரு நிகழ்வுகளையும் ஒன்றுபடுத்தி உலகத் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் சமூக நாளாகக் கொண்டாட தீர்மானித்தது. இற்றைப்படுத்தப்பட்ட தீர்மானம் 68 உறுப்பினர் நாடுகளையும் துறை உறுப்பினர்களையும் ஆண்டுதோறும் தேசியளவில் தகுந்த நிகழ்ச்சிகளை வடிவமைத்துக் கொண்டாடுமாறு அழைப்பு விடுத்தது.