போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளை மியான்மர் சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியான்மரில் கடந்த நவம்பரில் நடந்த தேர்தலில் ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி, புதிய அரசை ஏற்க ராணுவம் மறுத்தது.இது தொடர்பாக மியான்மர் அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் ஆங் சான் சூச்சி தலைமையிலான கட்சியின் ஆட்சியைக் கவிழ்த்து, ராணுவம் ஆட்சிப் பொறுப்பைக் கைப்பற்றியது.
பொதுமக்கள் இதை எதிர்த்து போராடி வருகின்றனர். ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கையாண்டால் கடும் விளைவுகளை மியான்மர் சந்திக்கும் என ஐநா சபை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் கூறும்போது, "மியான்மரில் அமைதியாகப் போராடுபவர்களின் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடுக்கை எடுத்தால் அதற்கான விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று தெரிவித்தார்.