வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மீண்டும் அணு ஆயுத சோதனைகளைத் தீவிரப்படுத்த தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கோரிக்கையை ஏற்று, அணு ஆயுத சோதனைகளில் வடகொரியா இனி ஈடுபடாது என அறிவித்த கிம் ஜாங் உன், உலக நாடுகளுடன் அமைதியாக இணைந்து வாழ்வதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார்.இந்நிலையில், அமெரிக்கா கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாததை அடுத்து, கடந்த சில மாதங்களாக அமெரிக்கா மீது கடும் கோபத்தில் இருந்து வருகிறார் கிம். அதிலும் தற்போது ட்ரம்ப் ஆட்சி முடிந்து ஜோ பைடன் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ள நிலையில், அமெரிக்காவுக்கு நெருக்கடி கொடுக்கும் வேலைகளில் கிம் இறங்கியுள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரியாவில் நேற்று நடந்த ஆளும் கட்சியின் ஒரு முக்கியக் கூட்டத்தில் பங்கேற்ற கிம் ஜாங், வடகொரியா மீண்டும் அதிநவீன அணு ஆயுத அமைப்புகளை உருவாக்குவதாகவும், அணு ஆயுதங்களை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்தார். அணு ஏவுகணைகள், உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றை உருவாக்க வேண்டும் என்றும் ராணுவ அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டார்.