ஸ்விட்சர்லாந்த் - புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு வழிகாட்டும் இரத்தினகுமார்

ஸ்விட்சர்லாந்த் தமிழர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பவர் ரத்தினகுமார், இவர் ஸ்விட்சர்லாந்த் அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மொழிபெயர்ப்பாளர். இன்றும் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து வரும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறார். 35 ஆண்டுகளுக்கு முன்பு தான்பட்ட வேதனை யாரும் படக்கூடாது என்ற அந்த எண்ணமே அவரை பலருக்கும் உதவ வைத்தது. அந்த பின்னணி சற்று பெரியது, அதை விட பெரியது அன்றிலிருந்து இன்று வரை அவர் ஆற்றிவரும் அரும்பணி. இரத்தினகுமார் இந்திய பயணமாக தமிழகம் வந்தபோது அவரை சந்தித்தோம், அவரது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.;

Update: 2020-12-21 14:41 GMT

காலசக்கரத்தின் சுழற்சி எங்களை இலங்கையில் இருந்து சுவிட்சர்லாந்திற்கு குடியமரவைத்தது. பல்வேறு சூழ்நிலைகளையும், அரசியல் காரணிகளையும் தாண்டி இங்கு நல்ல முறையில் வாழ்ந்து வருகிறோம் என்கின்றனர் அங்குள்ள தமிழர்கள். அவர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காக இருப்பவர் ரத்தினகுமார் என்ற தமிழர், இவர் ஸ்விட்சர்லாந்த் அரசின் அங்கீகாரம் பெற்ற அரசு மொழிபெயர்ப்பாளர்.


இன்றும் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்து வரும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருபவர், 35 ஆண்டுகளுக்கு முன்பு தான்பட்ட வேதனை யாரும் படக்கூடாது என்ற அந்த எண்ணமே அவரை பலருக்கும் உதவ வைத்தது. அந்த பின்னணி சற்று பெரியது, அதை விட பெரியது அன்றிலிருந்து இன்று வரை அவர் ஆற்றிவரும் அரும்பணி. இரத்தினகுமார் இந்திய பயணமாக தமிழகம் வந்தபோது அவரை சந்தித்தோம், அவரது அனுபவங்களையும் பணிகளையும் நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

இலங்கையிலிருந்து வெளியேறிய உடன் சுவிட்சர்லாந்தில் குடியேறி வாழும் உரிமை கிடைத்ததை நினைத்து மனம் ஆறுதல் அடைந்தேன். தாய்நாட்டை பிரிந்து வாழ்வது எளிதல்ல, குடும்பத்தையும், நண்பர்களையும் பிரிந்து செல்லும் சூழ்நிலை எனக்கு ஏற்பட்டிருந்தது. சூழ்நிலை எதுவாயினும் தாங்கிக் கொள்ளும் மனோதிடத்தில் வாழும் தைரியம் மட்டுமே அப்போது இருந்தது. இனி இதுதான் நாம் வாழும் பூமி,

ஸ்விட்சர்லாந்தில் வாழவேண்டும் என்றால் மொழி அறிவு சிறப்பாக இருக்க அந்த கலாச்சாரம் என்பவற்றை கற்றும் தெரிந்தும் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. பாரம்பரிய கலாச்சாரப் பின்னணியை கொண்ட நாம் அந்நிய பிரதேசமாக இருந்தாலும், இன மத மொழியின் பற்றுதலுடன் வாழ அனைத்து புலம்பெயர் தமிழர்களுக்கும் வழி ஏற்படுத்த வேண்டும் என்றும் மொழித் தேர்ச்சி பெற்று மேற்கல்வி கற்க வேண்டும் என எண்ணினேன். இப்படி ஒரு உத்வேகத்துடன் முதலில் German மொழியைக் கற்றுக் கொண்டேன். அதைத் தொடர்ந்து நான் எனது பட்ட படிப்பை சுவிட்சர்லாந்தில் முடித்தேன்.

ஸ்விட்சர்லாந்தில் குடியமர்ந்த பின்னரே எனக்கென குடும்பத்தை அமைத்துக் கொண்டேன். திருமணமாகி மனைவி, மக்களுடன் இங்கு குடியமரும் போது முற்றிலும் புதிய சூழல் ஏற்றுக்கொண்ட போதும் சரியான வழிகாட்டுதல் இல்லாததால் மனம் நிம்மதி இன்றி தவித்த நாட்கள் அதிகம்.

இந்த நேரத்தில் சுவிட்சர்லாந்து மக்களிடமிருந்து ஆதரவும், அன்பும் அதிகம் கிடைத்தது. அதுவே எங்களுக்கு இங்கு வாழ முடியும் என்ற நம்பிக்கையை தந்தது. 35 ஆண்டுகள் கடந்துவிட்டது , பழைய சூழல்களை நினைத்துப் பார்க்கும்போது நம்மை போல யாரும் இனி கஷ்டப்படக் கூடாது என்ற எண்ணமே என்னை பொது வாழ்வில் செயல்பட வைத்தது. ஆரம்பத்தில் ஏற்பட்ட வாழ்வாதார நெருக்கடிகளும் இனிவரும் தமிழ் உறவுகளுக்கு ஏற்படக் கூடாது அவர்கள் இந்த மண்ணை ஒரு மாறுபட்ட சூழல் என நினைக்காமல், இதனோடு இணைந்து வாழும் விதமாக தமிழ் கலாச்சாரம் சார்ந்தும் அவர்கள் வாழ்வாதாரம் சார்ந்தும் அதற்கான அமைப்புக்களான தமிழர் சங்கத்தை சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் கூறும் நல் உள்ளங்களோடு இணைந்து 1985 ஆம் ஆண்டு ஆரம்பித்தோம். அடுத்த ஆண்டே 1986இல் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை வானொலியில் ஒலி பரப்பினோம். 1987 இல் சுவிட்சர்லாந்து தமிழ் மன்றம் உருவாக்கினோம்.

தமிழ் கலைகளை குழந்தைகள் கற்கும்படி செய்தோம். இதைத் தொடர்ந்து பல மாநிலங்களிலும் தமிழர்களுக்கான அமைப்புகளை உருவாக்கினோம்.

சுவிட்சர்லாந்து வரலாற்று நோக்கில் ஒரு கூட்டமைப்பு. ஆனால் 1848 முதல் ஒருங்கிணைந்த தனி நாடாக உள்ளது. சுவிட்சர்லாந்து மாநிலங்கள் (canton) என அழைக்கப்படும் 26 மாநிலங்களைக் கொண்ட கூட்டாட்சி அரசு ஆகும். கூட்டமைப்பின் அதிகார தலைமையிடமாக பெர்ன் நகரமும், நாட்டின் பொருளாதார மையங்களாக ஜெனிவாவும், சூரிச்சிம் திகழ்கின்றன. இந்த இரண்டும் உலகளாவிய சிறந்த நகரங்கள் ஆகும். சிறப்புமிக்க சூரிச் வர்த்தக உலகில் புகழ் பெற்ற நகரமாக உள்ளது. சுவிட்சர்லாந்து உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக உள்ளது.

உலகின் உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை கொண்டுள்ள நகரங்களில் சூரிச் இரண்டாவது இடத்திலும், ஜெனிவா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

சுவிட்சர்லாந்து மனிதவளத்தை மதிக்கும் நாடு. பாகுபாடற்ற கல்வி முறையைக் கொண்டது. தொழிலை மேம்படுத்துவதிலும், திறமைக்கேற்ற வருமானத்தை கொடுப்பதிலும், உலக நாட்டில் உள்ள மனித வளங்களை தன்னை நோக்கி ஈர்க்கும் நாடாக திகழ்கிறது.  அகதிகளாக வந்தவர்களுக்கும் அடிப்படை தேவைகளை செய்து கொடுத்து வாழ வைக்கிறது.

சுவிட்சர்லாந்தில் சட்டத்தின் ஆட்சி வலிமையாக நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்தில் வாழவேண்டும் என்றாலோ, நற்பெயரெடுத்து நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என்றாலோ சட்டதிட்டங்களை தெரிந்திருக்க வேண்டும். சுவிட்சர்லாந்து நாட்டின் மொழியறிவும், சட்ட அறிவும் நன்கு கற்றுக் கொண்டேன் என்கிறார் ரத்தினகுமார்.

அதனால் புலம்பெயர்ந்து சுவிட்சர்லாந்துக்கு வருகை தரும் தமிழர்களுக்கு அரசாங்கத்தின் சார்பாக மொழி பெயர்பாளராகவும், சட்ட வழிமுறைகளை சொல்லி கொடுத்து வழிநடத்தும் வல்லுனராகவும் விளங்குகிறார்.

சுவிட்சர்லாந்தில் குடியமர்ந்த தமிழ் உறவுகளுக்கு சட்ட ஆலோசனை மையமாக "பாதை" மற்றும் "பல்மேரா" ஆகிய அமைப்புகளை ஏற்படுத்தி புதிதாகக் குடியேறும் தமிழர்களுக்கும், அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் வழிகாட்டியாகவும் இவர் விளங்குகிறார்.

சுவிட்சர்லாந்திற்கு புதிதாக குடியேறும் தமிழர்களுக்கும், அங்கு வாழ்ந்து வரும் தமிழர்களுக்கும் வழிகாட்ட, நிரந்தர குடியுரிமை பெறுதல் மற்றும் பல அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ள அனைவருக்கும் வழிகாட்டும் விதமாக "சுவீட்லேண்ட் சுவிட்சர்லாந்து" என்ற நூலை 2017 தமிழக பயணத்தின் போது ஈரோட்டில் வெளியிட்டார்.


இவருடைய மனைவி வங்கிதுறையில் அதிகாரியாக பணிபுரிகிறார். இரண்டு மகன்கள் ஒரு மகள். குடும்பமே பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருப்பது சிறப்பு. மகன் சங்கீர்னன் civil & law படித்தவர், கேன்சர் நோயால் முடியை இழந்தவர்களுக்கு தன்னுடைய முடியை தானமாக கொடுப்பவர், வீணாகும் நமது முடி கூட யாருக்காவது பயன்பட வேண்டும் என்கிறார். அடித்தால் மொட்டை வைத்தால் குடுமி என்பது போல 25 செ.மீ வரை முடியை வளர்பதும் மொட்டை அடித்து அதை கேன்சர் நோயால் முடியை இழந்தவர்களுக்கு விக் செய்து கொள்ள தானம் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். பகீர்னன் IT துறையில் பணியாற்றிவருபவர், தந்தையின் பணியில் ஆர்வத்துடன் உதவுபவர்.


மகள் கேதாரணி architect StudentIn Univetsity Luzern , Switzerland. ஸ்விட்சர்லாந்தில் கட்டடகலை படித்து கொண்டிருந்தாலும் சொந்த மண்ணில் மரபுசார்ந்த கலைகளையும் வாஸ்துவும் கற்றுக் கொள்ள தமிழகத்தின் தலைசிறந்த மாமல்லபுரம் சிற்ப கலை கல்லூரியி ன் முதல்வர் முனைவர் ஜே.ராஜேந்திரனிடம் நேரில் பயிற்சி பெற்றுள்ளார்.

தமிழன் இருக்கும் இடமெல்லாம் தமிழ் கடவுள் முருகனுக்கு என்று சிறப்பிடம் உண்டு. அப்படி சூரிச் மாநகரில் 1992 ஆம் ஆண்டு தமிழர்களின் முயற்சியில் ஸ்ரீ சிவசுப்ரமணிய தேவஸ்தானம் உருவாக்கப்பட்டது. 09.09.1994 கோவில் சிறு இடத்தில் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அவ்விழாவிற்கு சூரிச் நகர பிதா என அழைக்கப்படும் மேயர், அடிசில் நகர அமைச்சர் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவையும் பங்களிப்பையும் செய்தனர்.

swiss மக்களும் தமிழ் மக்களுக்கு இன்று வரை அனைத்திலும் ஆதரவாகவும் உதவியாகவும் இருந்துவருகின்றனர். வெளிநாட்டவர் வாழ்க்கையைப் பாதுகாக்கும் அரசு அதிகாரியான பீட்டர்வீட்டர் இவ்விழாவிற்கு பங்கெடுத்து உதவிகளை செய்தார். சூரிச் மாநிலத்தில் அமைந்துள்ள இந்த முருகன் கோவிலுக்கு இந்து மத குரு ஒருவரை இலங்கையிலிருந்து வந்து சேவை செய்வதற்கு அரசு முழு அங்கீகாரம் வழங்கியதுடன், இது அரசினுடைய அதிகாரப்பூர்வமான கோயிலாகவும் அங்கீகரித்துள்ளது.

அதற்கு காரணம் swiss இறையாண்மையை மதித்து நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழர்கள் நடந்து கொண்ட விதம். அதனால் பலருக்கு நிரந்தர குடியுரிமையும் கிடைத்துள்ளது. 16 ஆண்டுகளாக இந்த முருகன் கோவிலில் செயலாளராக இருந்து அனைத்து திருவிழாக்களும் நித்திய வழிபாடுகளையும் செம்மையாக நடத்தி வருகிறார் ரத்தினகுமார். தமிழர்களுக்கு வாழ்வியல் மற்றும் தொழில் முறை வழிகாட்டியாகவும் விளங்குவதோடு அவர்கள் கலாச்சார பண்பாடு பாதுகாப்பதிலும் ஆன்மீக பணிகளையும் செவ்வனே செய்து வருகிறார்.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் உண்டு என்பது தமிழ் மூதுரை. அதற்கேற்ப ஸ்விட்சர்லாந்திலும் குன்றின் மேல் முருகன் கோவில் அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலும் பெருமுயற்சியோடு அடிசில் நகரில் மலையில் ஒரு பகுதியை வாங்கியுள்ளார். ஆசியாவில் புகழ் மிக்க பழனி முருகன் மலைக்கோவிலை போல ஐரோப்பிய கண்டத்திலும் புகழ்மிக்க கோவிலாக அது திகழ வேண்டும் என்ற கனவோடு செயல் படும் அவருக்கு தமிழகத்தில் சிற்ப சாஸ்திரத்தில் கைதேர்ந்த அனுபவமிக்க ஸ்தபதி கலைச் செம்மல் கீர்த்திவர்மன் உறுதுணையாக இருந்து ஆலோசனை அளித்து வருகிறார்.

Tags:    

Similar News