தமிழக மாணவர்கள் மேற்படிப்புக்கு உக்ரைன் செல்வது ஏன்?
உக்ரைனில் 5 ஆயிரம் தமிழக மாணவர்கள் மேற்படிப்பு படித்து வருகின்றனர்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த நாள் முதலே இந்தியாவும் பதற்றத்தில் உள்ளது. காரணம், அங்குள்ள இந்தியர்கள் குறிப்பாக 20,000 மாணவர்களை மீட்க வேண்டும் என்ற அழுத்தம் எழுந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 மாணவர்கள் அங்கு படித்து வருவதாகவும் மாநில அரசு தெரிவித்துள்ளது. இத்தனை பெரும் எண்ணிக்கையிலான இந்திய, தமிழக மாணவர்கள் தங்களது மேற்படிப்புக்காக எதற்காக உக்ரைனைத் தேர்ந்தெடுத்தனர் என்ற கேள்வி பரவலாக எழுகிறது.
இந்திய மாணவர்கள் ஏன் உக்ரைன் சென்றனர்?'ஸ்டடி இன் உக்ரைன்' என்ற இணையதளத்தில் உள்ள தகவலின்படி, உக்ரைனுக்கு வரும் மாணவர்களில் பெரும்பாலானோர் மருத்துவக் கல்வி பயிலவே வருகின்றனர். இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. முதல் காரணம், உக்ரைனில் மருத்துவக் கல்வி பயில மிகவும் கட்டணம் குறைவு. 2வது காரணம், அங்கு பெறும் மருத்துவ சான்றிதழ் உலகம் முழுவதும் பல்வேறு மருத்துவக்கவுன்சில்களால், குறிப்பாக ஐரோப்பிய நாடுகளின் மருத்துவ கவுன்சில்களால் அங்கீகரிக்கப்படுகிறது. மேலும், உக்ரைனில் மருத்துவம் பயின்று சான்றிதழ் பெற்ற பின்னர் அங்கேயே நிரந்தர குடியுரிமை பெறவும், பிற ஐரோப்பிய நாடுகளில் மருத்துவராக பணிபுரியவும் வாய்ப்பு அதிகம். மருத்துவம் தவிர, உக்ரைனில் பொறியியல் படிப்புகள் பயிலவும் இந்திய மாணவர்கள் அதிகம் சென்றுள்ளனர்.