நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.;

Update: 2023-12-17 14:45 GMT

கன்னியாகுமரியில் மழை நீரில் சக்கிய காரை மீட்கும் பணி.

கனமழை எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென் தமிழகத்தின் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் காலை 6 மணிக்கு துவங்கி மாலை 3 மணி வரையிலான காலகட்டத்தில் 100 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சராசரியாக மாவட்டம் முழுவதும் 52.70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 258 மில்லி மீட்டர் மழையும், ஸ்ரீவைகுண்டத்தில் 200 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பஸ் நிலையம் வெள்ளத்தில் மிதக்கிறது.மேலும்  திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்திற்குள் மழை நீர் புகுந்துள்ளது.

இதேபோல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இடைவிடாமல் கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து மழை அதிகரித்து வருவதால் மீட்பு பணிகள் மற்றும் நிவாரண பணிகளை துரிதப்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளனர்.மேலும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


இதனிடையே இந்த 4 மாவட்டங்களிலும் பெய்து வரும் மழையின் நிலை, வெள்ளம் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை நடத்தியுள்ளார்.

4 மாவட்டங்களிலும் மிக மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமான சாலைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி வருவதால் பொதுமக்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மீட்பு பணியில் ஈடுபட தயார் நிலையில் இருக்குமாறு தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினருக்கு மாவட்ட நிர்வாகங்கள் உத்தரவிட்டு உள்ளன.

நெல்லை உள்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் புறப்பட தயாராக உள்ளனர்.

டிசம்பர் மாத தொடக்கத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கியது. வரலாறு காணாத இந்த மழையின் காரணமாக  அந்த நான்கு மாவட்ட மக்களும்  கடுமையாக பாதிக்கப்பட்டனர். இன்னும் சென்னையின் புறநகர் பகுதிகளில் வெள்ள நீர் முழுமையாக வடியவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின்  ரூ. 6 ஆயிரம் நிவாரண உதவி தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார்.

சென்னையிலாவது வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பலத்த மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆனால் நெல்லை உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் புயல் சின்னம் உருவாகாமலேயே பலத்த மழை கொட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News