சென்னைக்கு ரெட் அலர்ட்
சென்னையில் நவம்பர் 18ம் தேதி அதி கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால், வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது
சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த இரண்டு நாள்களில் மேற்கு திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக இன்று கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு, தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை (நவ.17) மழை
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, சேலம், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வருகின்ற 18ஆம் தேதி சென்னையில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.