சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்
சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.;
சென்னையில் இன்று இரவு வரை காற்றுடன் பலத்த மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று இரவில் இருந்து பலத்த மழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் சின்னமானது சென்னையில் இருந்து கடலில் 250 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டு இருந்தது. இந்த புயலானது தற்போது 110 கிலோ மீட்டர் அளவிற்கு சென்னையை நோக்கி நகர்ந்து உள்ளது. இதன் காரணமாகத்தான் சென்னையில் நேற்று இரவில் இருந்து மழை கொட்டி தீர்த்து வருகிறது.
சென்னை நகர் முழுவதும் பலத்த காற்று வீசி வருகிறது. காற்று மழையால் சாலைகளில் தண்ணீர் செல்வதற்கு வழி இன்றி தேங்கியுள்ளது. இதன் காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட மக்களை படகுகள் மூலம் மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள். ஆனாலும் சென்னை புறநகர் பகுதி மக்களுக்கு இன்னும் விடிவு காலம் பிறக்கவில்லை. மழை நின்றால் தான் அவர்கள் கரையேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் புயல் சின்னம் சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாகத்தான் சென்னையில் காற்றுடன் மழை அதிக அளவில் பெய்து வருகிறது. புயல் நாளை முற்பகலில் இருந்து இரவுக்குள் ஆந்திராவின் நெல்லூர் -மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றாலும் இன்று இரவு வரை சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்க்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.