தமிழகம், புதுவையில் எங்கெல்லாம் கனமழை பெய்யும்? வானிலை மையம் தகவல்
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் அடுத்த 24 மணி நேரத்தில் நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, திருச்சி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.;
தற்போது அக்னி நட்சத்திர காலகட்டம் என்ற போதும், மழை காரணமாக வெயிலின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து இதமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, மே 17, 18ம் தேதிகளில் நீலகிரி, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் மிக கனமழையும், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், வரும் 19ம் தேதி, வட உள்தமிழகம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை மையம் தெரிவித்துள்ளது.