பேய் மழை.... 8 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
இன்னும் சில வாரங்கள் வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கிய நிலையில், தொடர்ந்து அதிகரித்து நவம்பர் மாதம் முழுக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கொஞ்சம் இடையூறு ஏற்பட்டாலும், மழையால் ஏரி குளங்கள் செழிப்படைந்து இருப்பது மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இருந்தபோதிலும், வடகிழக்கு பருவமழை போன ஆண்டை விட குறைவாக பெய்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இன்னும் சில வாரங்கள் வடகிழக்கு பருவமழை நீடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை
தமிழகத்தில் நேற்றும் பல இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. தலைநகர் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் மக்கள் வீட்டிலேயே முடங்கினர். சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் நேற்று 9.8 செ.மீ மழை கொட்டித் தீர்த்தது.
காற்றழுத்த தாழ்வு பகுதி
இந்த நிலையில் அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது எனவும், அது மேற்கு - வட மேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், டிசம்பர் 2ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கை
அதே சமயம் அடுத்த 3 மணி நேரங்களுக்கு ராமநாதபுரம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சாலைகளில் சில இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கலாம், சில இடங்களில் சாலைகள் வழுக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்
சாலைகளில் செல்லும்போது பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருக்கலாம் மற்றும் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்திருக்கலாம் என்பதால் கவனமுடன் பார்த்துச் செல்ல வேண்டும். மேலும், வெளியே செல்லும் போது குடைகள் அல்லது மழைக் கோட்டை மறக்காமல் எடுத்துச் செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். மழை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம் என்பதால் அதற்கேற்ற வகையில் பயணத்தை அமைத்துக்கொள்ளுங்கள்.
பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் என மாணவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் விடுமுறை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அரசு திட்டமிட்டுள்ளது. மாவட்ட நிர்வாகங்கள் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், நிவாரண பொருட்கள் வழங்கப்படும். மேலும், மழை காரணமாக ஏற்படும் சேதங்களை மதிப்பீடு செய்து, அதனை சரிசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.