தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று துவக்கம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை, இன்று துவங்கியதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-10-29 11:01 GMT

தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை துவங்கியது.

தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். தமிழகத்தில் ஓராண்டில் பெய்யும் மொத்த மழை அளவில் 48 சதவீதம் வட கிழக்கு பருவமழைக் காலத்தில்தான் பெய்கிறது. இதில், கடலோரப் பகுதிகளுக்கு 60 சதவீதமும், மற்ற பகுதிகளுக்கு 40 முதல் 50 சதவீதம் வரையும் மழை கிடைக்கிறது.

ஆனால், அண்மையில் வங்கக் கடலில் உருவான 'சித்ரங்' புயலால், வடகிழக்கு பருவமழை துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில், தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அகடோபர் 29ம் தேதி துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையமும் ஏற்கெனவே அறிவித்து இருந்தது. இதன்படி இன்று, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவமழை தமிழக மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளிலும் , புதுவையிலும் இன்று  துவங்கியுள்ளது, என்று கூறப்பட்டுள்ளது.


ஆரஞ்சு அலர்ட்

தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், அக். 29 மற்றும் அக். 30ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அக். 31, நவ. 1 மற்றும் 2 ம் தேதி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நவ. 1, 2 ம் தேதி தமிழகத்திற்கு 'ஆரஞ்சு அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லூர் முதல் கடலூர் வரை மிக கனமழை பெய்யக்கூடும். இன்று தமிழகம், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை,தூத்துக்குடி, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் எனவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புயல்கள் உருவாக வாய்ப்பு

சராசரியாக இந்த வடகிழக்கு பருவத்தில் 3 சூறாவளி புயல்கள் ஏற்படுகின்றன. ஆனால், இந்த ஆண்டு வங்காள விரிகுடாவில் நிலவும் லாநினா மற்றும் எதிர்மறை இந்திய பெருங்கடல் இருமுனை நிலைமைகள் காரணமாக, அதிக மற்றும் தீவிரமான புயல்கள் உருவாகும் வாய்ப்புள்ளது.

வானிலை மாதிரிகளின் அடிப்படையில் வட ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா, மற்றும் வங்கதேசம் அருகே புயல்கள் கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. புயல்கள் தமிழகத்தை தாக்குவதை விட, இந்த பகுதிகளை அதிகமாக தாக்க வாய்ப்பு உள்ளது. வார இறுதியில் வங்க கடலில் புதிய புயல்கள் சுழற்சி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வடகிழக்குப் பருவமழை காலத்தில், தமிழகத்தை பல புயல்கள் தாக்கியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, 'நிஷா' புயலாக உருவெடுத்தது. கொட்டித்தீர்த்த கனமழையால், 12 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஜல் புயல், தானே புயல், நீலம் புயல், வர்தா, ஒக்கி, கஜா என பல புயல்கள் சென்னையையும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களையும் சூறையாடியுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டு புயல்கள் உருவானாலும் தமிழகத்தை தாக்க வாய்ப்பு இல்லை என்ற ஆறுதலான தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Similar News