தமிழகத்தில் வெப்பம் திடீர் அதிகரிப்பு: காரணம் என்ன?

தமிழகத்தில் திடீர் வெப்பம் அதிகரிக்க காரணம் என்ன என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்;

Update: 2023-07-31 06:41 GMT

பைல் படம்.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் வெப்பம் பொதுவாக குளிர்ந்த காற்று வீசக்கூடும். ஆனால் கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது.

பொதுவாக ஜூன், ஜூலை மாதங்களில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தொடங்கிய வெயில் இதுவரையில் சுட்டெரித்து வருகிறது. 4 மாதமாக தமிழகத்தில் வெப்பம் அதிகமாக உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவித்தது. இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று தெரிவித்தது. அதன்படி தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

தென்மேற்கு பருவமழை காலத்தில் வெயிலின் தாக்கம் ஏன் அதிகமாக உள்ளது அதற்கான காரணம் என்ன என வானிலை மைய அதிகாரி கீதா விளக்கம் அளித்தார். அவர் அளித்த விளக்கம்,

பொதுவாக தென்மேற்கு பருவமழை தமிழகத்திற்கு அதிகமாக கிடைக்காது. மேற்கு தொடர்ச்சி மலைகள் இங்கு இருப்பதால் அரபிக்கடலில் உருவாகி வரும் காற்றை அது தடுப்பதனால் கேரள பகுதிக்கு தான் மழை பொழிவு அதிகமாக இருக்கும். தற்போது வடக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டு இருப்பதால் வடமேற்கு திசையில் இருந்து வருகிற காற்று தடைபட்டுள்ளது.

நிலப்பகுதியில் இருந்துதான் காற்று வருகிறது. இவ்வாறு வரும்போது இடி-மின்னலுடன் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஆனால் அந்த மழையும் பெய்யவில்லை. அதனால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேற்கு திசையில் இருந்து காற்று வரவர வெப்பம் குறையும். ஆனால் கடந்த சில நாட்களாக மேற்கு திசை காற்று இல்லாததால் தான் வெயில் இயல்பை விட அதிகரித்தது.

இனி வெப்பம் படிப்படியாக குறையும். தென்மேற்கு பருவமழை காலத்தில் இதுபோன்று வெயில் தாக்குவது இயல்பான ஒன்றுதான். இது ஒன்றும் புதியது அல்ல. தமிழகத்தில் சாதாரணமாக நடக்கும் நிகழ்வு தான் என்று கூறினார்.

Tags:    

Similar News