பலத்த மழையால் மோசமான பாதிப்பு: படகு மூலம் மீட்கப்படும் சென்னை மக்கள்

பலத்த மழையால் சென்னையில் மோசமான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

Update: 2023-12-04 07:23 GMT

வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளில் தவித்த மக்களை பைபர் போட் மூலம் மீட்டு வரும் பேரிடர் மீட்பு குழுவினர்.

வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி உள்ளதால் சென்னை மாநகரம் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. கொட்டி தீர்த்து வரும் கனமழையால் சென்னை மாநகர மக்கள் மட்டும் இன்றி புறநகர் பகுதி மக்களும் தங்களது இயல்பு வாழ்க்கையை இழந்து உள்ளனர். வீட்டை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.

மின்சாரம் இல்லை, வெளியில் செல்வதற்கு போக்குவரத்தும் இல்லை. இதன் காரணமாக மக்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகிறார்கள். சென்னை மாநகர சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது என்றால் வண்டலூர், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி  போன்ற புறநகர் பகுதிகளில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத அளவிற்கு தெருக்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டது. மாடி வீடும் சேர்த்து கட்டி இருப்பவர்கள் மாடியில் தங்கி இருக்கிறார்கள்.

தரைத்தளத்தில் மட்டும் குடியிருப்பவர்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால் அவசர உதவிக்கு தீயணைப்பு துறைக்கும் பேரிடர் மேலாண்மை துறைக்கும் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்து விட்டு படகுக்காக காத்திருக்கிறார்கள். இப்படி தவிக்கும் மக்களை ரப்பர் படகு மற்றும் பைபர் போட் எனப்படும் படகுகளின் மூலம் பேரிடர் மீட்பு துறையினர் மீட்டு அருகில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள். சென்னையில் ஒரே நாளில் பெய்த கனமழையால் கடந்த 2015 ஆம் ஆண்டை விட பாதிப்புகள் மிக மோசமாக இருப்பதாக சென்னைவாசிகள் புலம்பி வருகிறார்கள்.

Tags:    

Similar News