5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக்கடல் பகுதியில் உருவான டவ் தே புயல் கரையை கடந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக சில இடங்களில் நல்ல மழை பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வெப்ப சலனம் காரணமாக, தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பசலனம் காரணமாக திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளையும், நாளை மறுதினமும் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
22-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இயல்பை விட 2 முதல் 3 டிகிரி வரை வெயில் அதிகரித்து காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.