வங்கக்கடலில் உருவாகிறது 'சிட்ரங்' புயல்: 4 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வருகிற 23ம் தேதி, புயலாக வலுப்பெற உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-10-20 15:13 GMT

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகியுள்ள வளிமண்டல சுழற்சியானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து 7.6 கி.மீ தூரம் வரை பரந்து விரிந்திருக்கிறது. வங்கக்கடலில் தென் கிழக்கு மற்றும் கிழக்கு மத்திய பகுதியில் உருவாகி உள்ள இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வடக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.

அது நாளை மறுநாள் (22ம் தேதி - சனிக்கிழமை ) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, மத்திய வங்கக்கடல் பகுதி மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருக்கும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேலும் வலுவடைந்து, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் வருகின்ற 23-ந்தேதி புயலாக வலுவடைய இருக்கிறது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாட்டால் பரிந்துரைக்கப்பட்ட 'சிட்ரங்' என்ற பெயர் வைக்கப்பட உள்ளது.

இந்த புயல் வடக்கு ஆந்திர கடலோர பகுதியை முதலில் தாக்கும். வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்கால், கேரளா, மாகே, கர்நாடகாவின் தெற்கு பகுதிகள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களிலும் பரவலான மழை மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில் கன மழையும், மற்ற இடங்களில் பரவலான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், புதிய புயல் உருவாவதை தொடர்ந்து பல கடலோர மாவட்டங்கள் உஷார் படுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆகையால் பொது மக்கள் முன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த புயல் தொடர்பாக பல்வேறு கணிப்புகள் இருந்தபோதிலும், ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியவை அக்டோபர் 23 மற்றும் 27 க்கு இடையில் மிகக் கனமழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என்பது நிச்சயம். அடுத்த 48 மணி நேரத்தில் கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் இந்திய கடற்கரையை நோக்கி பயணிக்கும். தற்போது நிலவும் வளிமண்டல சுழற்சி புயல் சின்னமாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும், தற்போதைக்கு அதன் பாதை இதுவரை கணிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறிய பிறகே இதுபற்றி மேலும் தகவல்களை கணிக்க முடியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, புயல் சின்னம் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை வெளியிட்டிருக்கும் நிலையில், ஒடிசா மாநில அரசு, அதன் ஊழியர்களுக்கு அக்டோபர் 23 முதல் 25ஆம் தேதி வரை அளித்த விடுமுறைகள் அனைத்தையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags:    

Similar News