சென்னையில் திடீர் கனமழை..! இதுதான் காரணமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இரவில் கனமழை பெய்து மக்களை குளிரச் செய்தது. ஆனால் வழக்கம்போல சென்னை வாசிகளுக்கு இது எரிச்சலையே தந்தது. வேலை விட்டு வீட்டுக்குத் திரும்பும்போது மழை என்பதால் அனைவரும் சிரமப்பட்டனர்.
தமிழகத்தில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசும் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாறுபாடு காரணமாக இரவில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து வாங்கியது. இரவு 8.45 மணி அளவில் தொடங்கிய மழை இடைவிடாமல் கொட்டித் தீர்த்தது.
கோயம்பேடு, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், தி நகர், கொளத்தூர், கொரட்டூர், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, வள்ளுவர் கோட்டம், வடபழனி, அடையாறு உள்ளிட்ட பல இடங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் பல இடங்களில் தஞ்சம் புகும் நிலை ஏற்பட்டது.
தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்க ஆரம்பித்ததால், வாகன ஓட்டிகள் சிரமமப்பட்டனர். தி நகர் சாலை, பிரகாசம் சாலை, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட அநேக சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியது. போக்குவரத்து நெரிசலும் ஏற்பட மழையில் நனைந்துகொண்டே பலரும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
வடசென்னைப் பகுதிகளான திருவொற்றியூர், காசிமேடு, ராயபுரம், வியாசர்பாடி, பெரம்பூர், திரு வி க நகர், புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, திருவேற்காடு, மாங்காடு, குன்றத்தூர், கோவூர் உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.
இதுதவிர திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, புலரம்பாக்கம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. பல இடங்களில் முன்னெச்சரிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் இருளில் மூழ்கிய நிலையில் பலரது பொழுது கழிந்தது.
சென்னை விமானநிலையத்திலும் விமான சேவை பாதிக்கப்பட்டன. அபுதாபி, கோவையிலிருந்து சென்னைக்கு வந்த 2 விமானங்கள் தரையிரங்கமுடியாமல் பெங்களூருவுக்கு திருப்பிவிடப்பட்டன. கோவை, ஹைதரபாத்திலிருந்து வந்த விமானங்களும் வானில் வட்டமடித்துக் கொண்டே இருந்தன. பின் நிலைமை சீரானதும் தரையிறக்கப்பட்டன. சென்னையிலிருந்து டெல்லி, மும்பை, கொச்சி, கொல்கத்தா உள்ளிட்டபகுதிகளுக்கு செல்லவிருந்த 12 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.
இன்றும், நாளையும் இதுபோன்ற மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு பெய்துள்ள மழையின் காரணமாக காலையில் குளிரான வானிலை நிலவியது. இன்று காலையில் அலுவலகத்துக்குச் சென்றவர்கள் அந்த குளுமையான கிளைமேட்டை ரசித்தபடியே சென்றனர். பலர் முன்னெச்சரிக்கையாக குடையுடன் பயணித்ததையும் பார்க்கமுடிந்தது.