சென்னை மாநகர மக்களை மீண்டும் மிரட்டும் செம்பரம்பாக்கம் ஏரி

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் சென்னை மாநகர மக்கள் மீண்டும் மரண பயத்தில் உள்ளனர்.

Update: 2023-12-04 08:07 GMT

செம்பரம்பாக்கம் ஏரி (கோப்பு படம்).

செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வருவதால் சென்னை மாநகர மக்களுக்கு மீண்டும் மரண பயம் ஏற்பட்டுள்ளது.

சென்னையில் மாநகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது செம்பரம்பாக்கம் ஏரி. செம்பரம்பாக்கம் ஏரி தண்ணீர் இல்லாமல் வறண்டு விட்டாலும் சென்னை மாநகர மக்களுக்கு பாதிப்புதான். அதே நேரத்தில் அதிக மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் நிரம்பி விட்டால் வெள்ள பாதிப்பின் காரணமாக சென்னை மக்களுக்கு மரண பயம் ஏற்படுவதும் உண்டு.

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பியதன் காரணமாக எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. பல உயிரிழப்புகளும் நடந்தன. இப்பொழுது சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக அணையின் முதலில் 200 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. பின்னர் அது படிப்படியாக உயர்த்தப்பட்டு 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

இந்த நிலையில் வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று இரவில் இருந்து சென்னையில் பலத்த மழை கொட்டி தீர்த்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. மொத்தம் 24 அடி உயரம்  உள்ள இந்த அணையின் நீர்மட்டம் தற்போது 21 அடியை தாண்டி விட்டது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு நேமம் ஏரி, பிள்ளைப்பாக்கம் ஏரி ஆகியவற்றில் இருந்து  தண்ணீர் வருகிறது .அந்த ஏரிகள் தற்போது நிரம்பி விட்டதால்  செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்வரத்து பத்தாயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது.

இதன் காரணமாக அணையின் பாதுகாப்பு கருதி 6,000 கன அடி தண்ணீர் தற்போது செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்டு வருகிறது. ஆனாலும் ஏரி விரைவாக நிரம்பி விட்டால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்னும் கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டிய சூழல் ஏற்படும் .அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் சென்னை மாநகர மக்களுக்கு மீண்டும் 2015 போன்று கடுமையான பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உருவாகி உள்ளது.

Tags:    

Similar News