தென் மாவட்டங்களில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

தென் மாவட்டங்களில் 2 நாள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Update: 2023-03-03 12:27 GMT

சென்னை வானிலை ஆய்வு மையம் (கோப்பு படம்).

தென் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது வெயில் வெளுத்து வாங்குகிறது. இரவில் பனி, பகலில் வெயில் என பருவ நிலை திடீர் என மாறிவிட்டது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பிப்ரவரி மாதம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதமே வடகிழக்கு பருவ மழை விடைபெற்று சென்று விட்டது. இதன் காரணமாக பிப்ரவரி மாதமே தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி விட்டதோ என கருதும் வகையில் வெயில் தற்போது மக்களை வாட்டி வதக்கி வருகிறது.

இந்த நிலையில்  நாளையும் ,நாளை மறுநாளும் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

03.03.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

04.03.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும்.

05.03.2023: தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும்.

06.03.2023 மற்றும் 07.03.2022: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News