மகிழ்ச்சியான குடும்பத்தை இழந்த மாணவன்..! அழகான படங்களை நீக்கியதன் சோக பின்னணி..!
வயநாடு நிலச்சரிவில் தனது குடும்பத்தையே இழந்த 18 வயது மாணவன் அபிஜித் தனது செல்போனில் சேமித்து வைத்திருந்த ஊரின் அழகான படங்களை நீக்கிவிட்டார்.;
Wayanad Landslide Tragedy Story
18 வயது ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துக்கொண்டிருக்கும் மாணவர் அபிஜித், தந்து சொந்த ஊரான கல்லிங்கல் கிராமமான புஞ்சிரிமட்டத்தில் பசுமையான மலைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்ற அழகினை தனது கைப்பேசியில் படம்பிடிப்பது வழக்கம்.
கல்லூரி விடுமுறையில் வீட்டுக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம், நிதானமாக உலாச் செல்வார். அப்போது தனது கைப்பேசியில் வானுயர் மலைகளையும் அருவிகளையும், மலர்களையும் படப்பிடிப்பார். அந்த அழகான படங்களை சமூக ஊடகங்களில் தந்து நண்பர்களுக்கு பகிர்ந்து' எங்கள் ஊரின் அழகைப்பாருங்கள்' என்று கூறி இருப்பார்.
Wayanad Landslide Tragedy Story
ஆனால் இப்போது....?? இந்த வார இறுதியில் மேப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ள நிவாரண முகாமில் அமர்ந்திருந்த அவர் முகத்தில் கண்ணீரின் தடங்கள். அவ்வாறு கண்ணீரில் அமர்ந்து இருந்த அவர் அந்த நேசத்துக்குரிய புகைப்படங்களை, அவை எழுப்பிய நினைவுகளைத் தாங்க முடியாமல் ஒவ்வொன்றாக அவைகளை அழித்துக்கொண்டிருந்தார்.
செவ்வாய்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு அவரது கிராமத்தை தரைமட்டமாக்கிவிட்டது. அவரது வாழ்க்கையையும்தான். ஆமாம், அவரது பெற்றோர், உடன்பிறந்தவர்கள், பாட்டி, மாமா, அத்தை, உறவினர் மற்றும் நான்கு நெருங்கிய அண்டை வீட்டார் உட்பட அவரது முழு குடும்பத்தையும் அந்த கோர நிலச்சரிவு பழி வாங்கிவிட்டது. தற்போது அபிஜித்தின் வாழ்க்கை சிதைந்து கிடக்கிறது.
Wayanad Landslide Tragedy Story
வயநாட்டில் இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்தது. படிப்பிற்காக திருவனந்தபுரத்தில் இருந்ததால் தான் அபிஜித் உயிர் பிழைத்தார். அவரது கிராமம் ஒரு காலத்தில் பாதுகாப்பான மற்றும் அழகான கிராமமாக இருந்தது. அடிக்கடி புகைப்படம் எடுத்து நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதை வழக்கமாகக்கொண்டிருந்தார். ஆனால் இன்று கற்பனை செய்ய முடியாத சோகத்தின் தளமாக மாறி இருந்தது.
அபிஜித் பெற்றோர், உறவினர்களை இழந்து தனிமையில் விடப்பட்டுவிட்டார். அவருடைய மாமா நாராயணனின் குடும்பத்தில் இருந்து தப்பிய ஒரே ஒருவரான அவரது உறவினர் பிரணவ் மட்டுமே உடன் இருக்கிறார்.
Wayanad Landslide Tragedy Story
அவரது அதிர்ச்சிக்கு மத்தியில், அபிஜித் தனது தந்தை மற்றும் சகோதரியின் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக மாரியம்மன் கோயில் அருகே இருக்கும் அடக்கம் செய்யும் இடத்திற்குநிவாரண முகாமில் இருந்து வெளியேறினார்.
"எங்கள் கிராமத்தின் அழகினை படமாக எடுத்து வைத்திருந்தேன். அவைகள் என் நினைவுகளை காயப்படுத்திக்கொண்டே இருந்தன. என்னால் நிம்மதியாக இருக்கமுடியவில்லை. எனது பெற்றோர், எனது உடன் பிறப்பு, உறவினர்கள் என அத்தனை பேரையும் மீண்டும் மீண்டும் என் நினைவுக்குள் கொண்டுவருகின்றன.
அந்த சோகங்களைத் தாங்கமுடியாமல் பெரும்பாலான படங்களை நான் நீக்கிவிட்டேன். எல்லாவற்றையும் தொலைத்துவிட்டு அவற்றை வைத்து இருந்து என்ன பயன்?" என்று அபிஜித் கண்ணீருடன் கூறினார். படங்கள் அழைக்கப்பட்டாலும் அவரது உள்ளத்தில் ஆறாத வடுக்களாக பதிந்து கிடக்கும் சோகங்களை என்ன செய்வது? அதை நினைவுகளில் இருந்து அழித்துவிட முடியுமா..?
காலமே..நீதான் பதில் சொல்லவேண்டும்..!!
உயரமான இடம் என்பதால் பாதுகாப்பானதாக கருதப்பட்ட அபிஜித்தின் வீடு முற்றிலும் அழிக்கப்பட்டது. அப்போது அதில் இருந்த 12 பேரும் உயிரிழந்தனர். அவரது தந்தை, சகோதரி, மாமா மற்றும் அத்தையின் உடல்கள் இடிபாடுகளில் காணப்பட்டன. ஆனால் அவரது தாய், சகோதரர், பாட்டி மற்றும் உறவினர் காணாமல் போயுள்ளனர். மற்றொரு பேரதிர்ச்சி நிலச்சரிவு ஏற்பட்ட சூரல்மாலாவுக்கு தனது உறவினர்களைப் பார்க்க வந்திருந்த அத்தையையும் அபிஜித் இழந்தார்.