முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Update: 2021-04-16 09:30 GMT

கோடை மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்வரத்து விநாடிக்கு 225கன அடியாக அதிகரித்துள்ளதால் ஐந்து மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் தேக்கடியில் அமைந்துள்ளது முல்லைப்பெரியாறு அணை. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாகத் திகழ்கிறது. கோடை காலம் துவங்கியதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பே அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையளவு குறைந்ததால் நீர்மட்டம் சரியத் தொடங்கியது.இந்நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக கேரளா, தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது. இதன் காரணமாக நீர்வரத்தின்றி காணப்பட்ட முல்லைப் பெரியாறு அணைக்கு 100 கன அடியாக நீர்வரத்து ஏற்பட்டது.

தொடர்ந்து நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்றும் பெய்த கனமழையால் தற்போது முல்லைப் பெரியாறு அணையின் நீர்வரத்து விநாடிக்கு 225கன அடியாக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.35அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 4,303மி.கன அடியாக இருக்கிறது. அணையில் தமிழகப்பகுதிக்கு குடிநீர் தேவைக்காக 100கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணையில் 28.6மி.மீ., தேக்கடியில் 9.0 மி.மீ மழையளவும் பதிவாகியுள்ளது. கோடை காலத்தில் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் 5 மாவட்ட பாசன பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News