ஓபிஎஸ் மாமியார் மறைவு - முதல்வர் நேரில் ஆறுதல்
தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் மறைவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் இரங்கல்.;
துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மாமியார் காலமானார். அவரது குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடிபழனிச்சாமி நேரில் ஆறுதல் கூறினார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் தாயார் வள்ளியம்மாள் (90), வயது முதிர்வு காரணமாக கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது நல்லடக்கம் நேற்று முன்தினம் மாலை அவரது சொந்த ஊரான தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் நடைபெற்றது. அதில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் உள்பட அதிமுக மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இதையடுத்து நேற்று அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட அமைச்சர்களும் நேரில் வந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் துக்கம் விசாரித்தனர்.
இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று தேனி மாவட்டத்திற்கு நேரில் வந்து உத்தமபாளையம் ஞானம்மன் கோவில் தெருவில் உள்ள வள்ளியம்மாளின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் துணை முதல்வர் ஓ.பி.எஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அவருடன் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, ராஜலட்சுமி மற்றும் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டு துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள். முதலமைச்சர் வருகையை ஒட்டி தேனி மாவட்டத்தில் முதலமைச்சரின் காவல் பிரிவினர், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர்கள், என சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.