கம்பம் அருகே சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 10 ஆண்டு சிறை தண்டணை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள க.புதுப்பட்டி பழைய நூலகத் தெருவைச் சேர்ந்தவர் மனோகரன் (61). இவர் கடந்த 2017ம் ஆண்டு அதே பகுதியில் உள்ள ஒன்றாம் வகுப்பு படித்து வந்த 5வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது வீட்டில் வைத்து வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதனடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து மனோகரனை கைது செய்த உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல்துறையினர், அவரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தேனி மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில் குற்றவாளி மனோகருக்கு 10 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.5ஆயிரம் அபராதமும், இதை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என நீதிபதி வெங்கடேசன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு அவருக்கு தமிழக அரசு ரூ.5லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.