அதிமுகவிற்கு எதிராக களம் இறங்கிய சீர்மரபினர் நலச் சங்கம்
அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டாம் என பாலில் சத்தியம்
சீர்மரபினர் நலச் சங்கம் சார்பாக, 68 சமுதாய மக்களுக்கு டிஎன்டி என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக அரசு டிஎன்டி சான்றிதழ் வழங்குவதாக கூறி ஏமாற்றிவிட்டனர் என கூறி வரும் சட்ட மன்ற தேர்தலில் அதிமுக விற்கு வாக்கு அளிக்கக்கூடாது என களத்தில் பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.
அதிமுக அரசிற்கு அவர்களது எதிர்ப்பை காட்டும் விதமாக வீடு மற்றும் வீதிகளில் கருப்பு கொடிகளை கட்டிய சீர்மரபினர் நலச்சங்கத்தினர் அதிமுக விற்கு வாக்களிக்க கூடாது என கூறி பொதுமக்களின் காலில் விழுந்து வணங்கி வேண்டினர்.
இந்நிலையில் கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சின்னமனூர் அருகே உள்ள அப்பிபட்டி கிராமத்தில் சீர்மரபினர் நலச்சங்கத்தினர் சார்பாக, அதிமுக அரசிற்கு வாக்களிக்க கூடாது எனக்கூறி கையில் கருப்பு கொடி மற்றும் பால் கிண்ணத்துடன் ஊர்வலமாக வந்தவர்கள் அங்குள்ள மாரியம்மன் கோவில் வைத்து பாலில் அடித்து வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக விற்கு வாக்களிக்க மாட்டோம் என சத்தியம் செய்தனர்.
மேலும் கிராமத்தில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் சென்று அதிமுக விற்கு வாக்களிக்க கூடாது என சத்தியம் வாங்கினர். அடுத்தகட்டமாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அதிமுக அரசிற்கு வாக்களிக்க கூடாது என பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளனர்.