பெரியாறு அணையில் மூவர் கண்காணிப்புக் குழு ஆய்வு
மத்திய நீர்வள ஆணைய முதன்மை பொறியாளர் குல்சன் ராஜ் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் இன்று முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு செய்தனர்.;
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2014-ல் உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அணையை கண்காணித்து பராமரிக்க மூவர் கொண்ட கண்காணிப்பு குழுவை நியமித்தது. தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய, அணை பாதுகாப்பு அமைப்பின் முதன்மை பொறியாளர் குல்சன்ராஜ் உள்ளார்.
தமிழக அரசு பிரதிநிதியாக தமிழக பொதுப்பணித்துறை அரசு முதன்மை செயலர் மணிவாசன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வளத்துறை செயலர் டி.கே.ஜோஸ் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜனவரி 28-ல் மூவர் கண்காணிப்புக்குழுவினர் பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். இந்நிலையில், ஓராண்டுக்குப் பின் கண்காணிப் குழுவினர் இன்று பெரியாறு அணையில் ஆய்வு செய்தனர். (தமிழக பிரதிநிதி மணிவாசன் இன்று ஆய்வில் கலந்து கொள்ளவில்லை) இவர்களுடன் காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்ரமணியம், மதுரை மண்டல கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், துணை கண்காணிப்பு குழு தலைவர் மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார், பெரியாறு சிறப்பு கோட்ட செயற்பொறியாளர் சாம் இர்வின், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினுபேபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்குழுவினர், மெயின் அணை, பேபிடேம், மதகுப்பகுதி, சீப்பேஜ் வாட்டர் அளவு குறித்தும் ஆய்வு செய்தனர். பின்னர் தேக்கடி ஆனவச்சால் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் மூவர் கண்காணிப்பு குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதன் முடிவில் ஆய்வறிக்கை உச்சநீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.