தேனி -இணையவழி கலைஇலக்கிய போட்டிகள்; பள்ளிமாணவர்கள் மாநில அளவில் சாதனை
போடியில் குரலிசை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்டமாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் இணைய வழியில் நடைபெற்றது.;
தேனி மாவட்டம், போடியில் இணையவழியில் நடைபெற்ற கலை இலக்கிய போட்டிகளில் மாநில அளவில் சாதனை படைத்த பள்ளி மாணவர்களை பள்ளி நிர்வாகிகள் பாராட்டினர்.
கோவையில் செயல்பட்டு வரும் சொல்வெட்டுச் சிற்பங்கள் உலகத் தமிழர் கல்வி மற்றும் இலக்கியக் கழகம், தமிழ்நாடு அமைப்பின் சார்பில் 2021 ஆம் ஆண்டுக்கான குரலிசை, ஓவியம், பேச்சு, கவிதை உள்ளிட்ட மாநில அளவிலான கலை இலக்கிய போட்டிகள் இணைய வழியில் நடைபெற்றது. இதில் போடியில் உள்ள அரசு உதவி பெறும் பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மழலையர் பிரிவில் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர்.
இந்த போட்டிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 4 ஆம் வகுப்பு மாணவி ர.ஆர்த்தி குரலிசை போட்டியில் மாநில அளவில் முதலிடத்தையும், அ.நிதர்சனா மாநில அளவில் இரண்டாமிடத்தையும் பெற்றனர்.
இப்போட்டிகளில் முதல் வகுப்பு மாணவன் ச.குகன், 7 ஆம் வகுப்பு மாணவன் ச.பாலமுருகன் ஆகியோர் குரலிசை மற்றும் ஓவிய போட்டிகளில் பங்கேற்றிருந்தனர்.
மாநில அளவில் சாதனை படைத்த மாணவிகள் ர.ஆர்த்தி, அ.நிதர்சனா ஆகியோருக்கான பாராட்டுச் சான்றிதழ்கள் பெற்றோர் மூலம் வழங்கப்பட்டது. பங்குபெற்று சாதனை படைத்த மாணவிகளுக்கும், பயிற்சி அளித்த ஆசிரியை ஆ.தனலட்சுமி ஆகியோருக்கு பள்ளி தலைமையாசிரியர் ரா.ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.