போடியில் தமாகா கட்சி நகரத் தலைவர் வீட்டில் சுமார் 2மணி நேரமாக நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு பெற்றது. திமுகவின் தூண்டுதலால் தான் ஐடி ரெய்டு நடத்தப்பட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி போடி நகரத் தலைவர் அங்குவேல் என்பவரது வீட்டில் இன்று வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர். போடி எஸ்.எஸ்.புரம் பகுதியில் உள்ள அவரது இல்லம் மற்றும் அலுவலகங்களில் இந்த சோதனை நடைபெற்றது. வருமான வரித்துறை உதவி ஆணையர் மதுரை பூவலிங்கம் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில் பணம், முக்கிய ஆவணங்கள் ஏதும் கைப்பற்றப்படவில்லை என வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இது குறித்து அங்குவேல் கூறுகையில், அதிமுக கூட்டணியில் தமாகா இடம்பெற்றுள்ளது என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியால், திமுக தூண்டுதலால் தான் இந்த வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.