இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணம் : இருவர் பலி – ஒருவர் படுகாயம்
போடி மெட்டு மலைச்சாலையில் இரு சக்கர வாகனத்தில் மூன்று கூலித் தொழிலாளர்கள்பயணம். விபத்தில் இருவர் பலி, ஒருவர் காயம்.;
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள டொம்புச்சேரி பகுதியை சேர்ந்தவர்கள் மாரிமுத்து (35), காளியப்பன் (55) மற்றும் பழனிச்சாமி (60). ஏலத்தோட்ட கூலித் தொழிலாளிகளான இவர்கள், கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பி.எல்.ராம் செல்வராஜ் என்பவர் தோட்டத்தில் இன்று வேலைக்கு சென்றுள்ளனர். பணி முடிந்து இரு சக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணம் செய்துள்ளனர். போடி மெட்டு மலைச் சாலையில் முந்தலுக்கு மேல் உள்ள 1வது கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காளியப்பன், பழனிச்சாமி ஆகிய இரு முதியவர்களும் படுகாயம் அடைந்தனர். மாரிமுத்துவிற்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து பலத்த காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு போடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் முதலுதவி செய்யும் போது பழனிச்சாமி உயிரிழந்தார். இதையடுத்து மேல்சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட காளிமுத்துவும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து குரங்கனி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் தொழிலாளர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.