எம்ஜிஆரிடம் பாராட்டு பெற்ற வரலாற்றுக்குரியவர் திமுக தலைவர் ஸ்டாலின் என போடியில் நடைபெற்ற திமுக கூட்டத்தில் ஐ.லியோனி பேசினார்.
தேனி மாவட்ட திமுக மாணவரணி மற்றும் போடி ஒன்றிய, நகரம் சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் கூட்டம் நடைபெற்றது. போடியில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே நடைபெற்ற இக்கூட்டத்தில் திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.அப்போது அவர் பேசுகையில், உன்னைப் போன்ற தலைமுறையினர் தான் இன்றைய அரசியலுக்கு வர வேண்டும் என்று ஸ்டாலினின் தோளில் கை போட்டு பாராட்டியவர் எம்.ஜி.ஆர். அத்தகைய வரலாற்றுக்குரியவர் ஸ்டாலின். அவ்வாறான வரலாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உண்டா? என கேள்வியெழுப்பினார்.
ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய ஓபிஎஸ், துணை முதல்வர் பதவி கிடைத்ததும் அதைப் பற்றி எல்லாம் மறந்து விட்டார். சட்டையில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை வைத்துக் கொண்டு அவருக்கு துரோகம் செய்து வருகிறார்கள். ஆனால் ஸ்டாலின் முதல்வரானதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படும். சேலம் சிறையில் முதல்வரும், மதுரை சிறையில் துணை முதல்வரும் அடைக்கப்படுவார்கள் என்றார். இக்கூட்டத்தில் திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் உள்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.