பத்திரிக்கையாளர்கள் சாலை மறியல்

Update: 2021-03-16 02:50 GMT

       தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழுத் தலைவரும், அ.தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் ஏ.லோகிராஜன் வேட்பாளராக அ.தி.மு.க சார்பில் நிறுத்தப்பட்டுள்ளார். ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட கடந்த 2 நாட்களாக யாரும் வேட்புமனு செய்யாத நிலையில், அ.தி.மு.க மற்றும் நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அ.தி.மு.க வேட்பாளர் ஆண்டிப்பட்டி வைகை அணை சாலைப்பிரிவில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து திறந்தவெளி ஜீப்பில் நின்றபடி ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகம் வரையில் ஊர்வலமாக சென்றனர். தாலுகா அலுவலகத்திற்கு 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாக கட்சியினர் அனைவரும் தடுத்து நிறுத்தப்பட்டு வேட்பாளர் உள்பட 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியனியிடம் அ.தி.மு.க வேட்பாளர் ஏ.லோகிராஜன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்து, உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.


நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான நாம்தமிழர் கட்சியினர் கையில் கரும்பை ஏந்தியபடி ஆண்டிப்பட்டியில் இருந்து ஊர்வலமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். வேட்பு மனு தாக்கலின் போது ஆண்டிப்பட்டி வட்டாட்சியர் அலுவலத்திற்குள் குறிப்பிட்ட சில பத்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்ற பத்திரிகையாளர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் தேனி - மதுரை சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, பத்திரிகையாளர்களை அலுவலகத்திற்குள் அனுமதித்தனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News