புதுப்பெண் மாயம் - மாப்பிள்ளை வீட்டாருக்கு அரிவாள் வெட்டு.

ஆண்டிபட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் கணவர் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு. பெண் வீட்டார் 3 பேர் கைது.;

Update: 2021-04-11 17:20 GMT

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தெற்கு மூணாண்டிபட்டியைச் சேர்ந்த கனகன் என்பவரின் மகன் ராஜ்குமார் (28). இவருக்கும் வடக்கு மூணாண்டிபட்டியைச் சேர்ந்த பேயத்தேவர் மகள் ஜெயப்பிரியா (19) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற நாள் முதலே கணவன் மனைவிக்கு இடையே தொடர்ந்து ஏற்பட்ட சண்டை காரணமாக ஜெயப்பிரியா கடந்த பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியதாகவும் அவரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதன் காரணமாக இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஜெயப்பிரியா குறித்து ராஜ்குமாரின் குடும்பத்தினர் கேட்டதில் மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த பேயத்தேவர் மற்றும் அவரது மகன் சின்னச்சாமி ஆகியோர் ராஜ்குமாரின் தந்தை கனகன், தாயார் மின்னல்கொடி ஆகியோரை அரிவாளால் வெட்டியுள்ளனர். டீக்கடை முன்பாக நடைபெற்ற இச்சம்பத்தை விலக்கி விட முயன்ற அங்கிருந்த உறவினர்கள் மதியழகன், கணேசன், தெய்வேந்திரன் ஆகியோரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த 5 பேரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து சின்னச்சாமி, பேயத்தேவர் அவரது மனைவி பசுபதி ஆகிய 3 பேர் மீதும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திய ஆண்டிபட்டி காவல்துறையினர் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Tags:    

Similar News