ஆண்டிபட்டியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா?: அதிமுக வேட்பாளர் மீது வழக்கு
ஆண்டிபட்டி அருகே வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக எடுத்துச் சென்ற பணம் சிக்கியது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்கு உட்பட்ட கொத்தப்பட்டி கிராமம் அருகே பனஜராஜா தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தேர்தல் மேற்பார்வையாளர் வாகனங்களை சோதனை செய்தார்.
இதில், ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் லோகிராஜனுக்கு ஆதரவாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்தவதற்காக குபேந்திரன் என்பவருக்கு சொந்தமான காரில் ரூ.28 ஆயிரம் பணம் இருப்பது தெரியவந்தது. மேலும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதி பெறாமல் நம்பர் பிளேட் பொருத்தாத காரில் வந்திருப்பதும் கண்டறியப்பட்டது.
பின்னர், தேர்தல் மேற்பார்வையாளர் உத்தரவின் பேரில் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய வைத்திருந்த பணம் ரூ.28,000 மற்றும் அனுமதி பெறாமல் நம்பர் பிளேட் பொருதுத்தப்படாத கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி பனஜராஜா அளித்த புகாரின் பேரில், ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் லோகிராஜன், அவருடைய சகோதரர் குபேந்திரன், அதிமுக நிர்வாகி பிரபு, டிரைவர்கள் பாலமுருகன், பாண்டி ஆகிய 5 பேர் மீது இராஜதானி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக ஆண்டிபட்டி அதிமுக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.