தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் பணிகளுக்கான நிதியை வழங்கக்கோரி ஒப்பந்தகாரர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகம் மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ், கழிப்பறை, தடுப்பணை, தெருக்களில் பேவர் பிளாக் கற்கள் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு மூலப்பொருட்கள் ஒப்பந்தகாரர்கள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாகவே 100 நாள் வேலை திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்கு மூலப்பொருட்கள் வழங்கியதற்கான நிதியை அரசு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இவற்றில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் மட்டும் ரூ.2 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. நிதி வழங்க வேண்டும் என்று ஒப்பந்தகாரர்கள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை வழங்கப்படவில்லை. இந்நிலையில் நிலுவையில் உள்ள நிதியை உடனே வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆண்டிபட்டி ஒன்றிய அலுவலகத்தில் மூலப்பொருட்கள் வழங்கிய ஒப்பந்தகாரர்கள் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் உதவி திட்ட இயக்குனர் உலகநாதன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் அடுத்த ஒரு வாரத்தில் அனைவருக்கும் மூலப்பொருட்களுக்கான நிதி ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்படும் என்று உறுதியளித்தார். மேலும் ஒப்பந்தகாரர்கள் கோரிக்கை குறித்து மனு வழங்கும்படியும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து ஒப்பந்தகாரர்கள் கோரிக்கை மனுவை அதிகாரிகளிடம் வழங்கிவிட்டு சென்றனர்.