சேலத்தில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவதில் ஆண்களுக்கு வேஷ்டிக்கு பதில் புடவை கொடுத்து அவமதிப்பதாக தொழிலாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழக அரசு இந்த ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பாக பச்சரிசி, வெல்லம், பாசிப்பருப்பு, நெய் முந்திரி, திராட்சை உள்ளிட்டவைகளுடன் ஆண்களுக்கு வேஷ்டி துண்டும், பெண்களுக்கு புடவையும் வழங்கப்படும் என அறிவித்தது. இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 12 இடங்களில் 88 ஆயிரம் கட்டுமான தொழிலாளர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் வேஷ்டி துண்டு மற்றும் புடவை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சேலம் சூரமங்கலம் பகுதியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகுப்புடன் ஆண்களுக்கு வழங்கப்படும் வேஷ்டி துண்டுக்கு பதிலாக இருபாலருக்கும் புடவையை மட்டும் தருவதாக குற்றம் சாட்டினர். தமிழக அரசு அறிவித்தபடி ஆண்களுக்கு வேஷ்டி துண்டு வழங்க வேண்டும் என்று கூறிய பயனாளிகள் வேஷ்டிக்கு பதிலாக ஆண்களுக்கும் புடவையை தருவது தங்களுக்கு அவமரியாதையாக உள்ளது என தெரிவித்தனர்.