நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறி சேலத்தில் அவரது ரசிகர்கள் கைகூப்பி வணங்கி வா தலைவா வா என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். இந் நிலையில் கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி தனது உடல்நிலையை காரணம் காட்டி தான் அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் அறிக்கை மூலம் தெரிவித்தார். ரஜினியின் இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது அறிவிப்பை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வரக்கோரி அவரது வீடு முன்பும் ரசிகர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி சேலம் ராகவேந்திரா ரஜினி ரசிகர்கள் நற்பணி மன்றத்தின் சார்பில் 20க்கும் மேற்பட்ட ரஜினி ரசிகர்கள் கைகூப்பி வணங்கி வா தலைவா வா என்று முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்பதை எண்ணி மன்றத்தில் பணியாற்றி வருகிறோம். ஆனால் தற்போது ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்தது மிகப்பெரிய வேதனையாக உள்ளது. தனது அரசியல் அறிவிப்பை மறுபரிசீலனை செய்து அரசியலுக்கு வர வேண்டும் என்றும் வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினிகாந்த்தின் பங்களிப்பு கட்டாயம் இருக்கும் என நம்பிக்கை இருக்கிறது என ரசிகர்கள் தெரிவித்தனர்.