பணம் இரட்டிப்பாக்கி தருவதாக மோசடி, இருவர் கைது

Update: 2021-01-10 07:15 GMT

நாமக்கல்லில் பணம் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் வண்டிக்கார தெருவை சேர்ந்தவர் வெங்கடேஷ் (43). டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இவரது பாருக்கு மது குடிக்க வந்த சேந்தமங்கலத்தை சேர்ந்த டிரைவர் பாஸ்கரன் (26), மணிமாறன் (45) ஆகியோர் தங்களுக்கு தெரிந்த நபர்கள் கணக்கில் வராத கருப்பு பணம் நிறைய வைத்திருப்பதாகவும், அதை வெள்ளை பணமாக மாற்றி இரட்டிப்பு செய்து தருவதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி உள்ளனர். இந்நிலையில், நேற்று காலையில் சேந்தமங்கலம் சாலையில் உள்ள ரயில்வே பாலம் அருகே வந்த போது காரில் சேந்தமங்கலத்தை சேர்ந்த கண்ணன், முருகன், விக்ரம் ஆகியோர் இருப்பதாகவும், பணம் கொடுத்தால், இரட்டிப்பாக்கி கொள்ளலாம் என்று கூறி உள்ளனர். இதை உண்மை என நம்பி தன்னிடம் இருந்த ரூ.5 ஆயிரத்தை வெங்கடேஷ் காரில் இருந்த விக்ரமிடம் கொடுத்து உள்ளார்.

அதற்கு பதிலாக காரில் இருந்த நபர்கள் 100 ரூபாய் கட்டு கொடுத்து உள்ளனர். அப்போது போலீஸ் வருவதாக கூறி அங்கிருந்து அனைவரும் தப்பி சென்று விட்டனர். வெங்கடேஷ் தன்னிடம் கொடுத்த 100 ரூபாய் கட்டை பிரித்து பார்த்து உள்ளார். அப்போது அதில் மேல் பகுதியில் மூன்று 100 ரூபாய் நோட்டுகளும், அடிப்பகுதியில் இரண்டு 100 ரூபாய் நோட்டுகளும் இருந்தன. மீதமுள்ள அனைத்தும் வெள்ளை தாள்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இது குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்தார்.அதன் பேரில் நாமக்கல் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து மோசடியில் ஈடுபட்ட பாஸ்கரன், மணிமாறன் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த வழக்கில் கண்ணன், விக்ரம், முருகன் ஆகிய 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நாமக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags: