கொரோனாவும் தண்ணீர் பயன்பாடும்: 4 மடங்கு அதிகமாம்

கொரோனா பரவல் காலத்தில் குடும்பங்களின் தண்ணீர் பயன்பாடு அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

Update: 2021-04-18 06:30 GMT

நீரின் அவசியம் குறித்து வலியுறுத்தும் படம் 

'நீரின்றி அமையாது உலகு' என்பது வள்ளுவனின் வாக்கு. நீரில்லாத ஒரு உலகினை நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.


கொரோனா தொற்று பரவல், அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என  மக்களை வழக்கமான நடவடிக்கைகளில் இருந்து மாற்றி விட்டுள்ளது.   அதனால், தண்ணீரின் பயன்பாடும்  அதிகரித்துள்ளது. அதன் தேவையும் உயர்ந்துள்ளது.

பயன்பாடு அதிகரிப்பு

வேலைக்குச்செல்வது குறைந்துவிட்டது. மாணவர்கள் பள்ளி,கல்லூரிகளுக்கு செல்வது தடைபட்டுவிட்டது. அதனால் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாய சூழல் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணிகளை செய்ய அனுமதித்துள்ளது. ஆக, குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானவர்கள் வீட்டிலேயே இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால், தண்ணீர் செலவும் அதிகரித்துள்ளதாக குடும்பத்த தலைவிகள் கூறுகின்றனர்.


நீரின்றி அமையாதுலகு

நீரின்றி அமையாது உலகு, ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் போன்ற வாக்கியங்கள் எல்லாம் நீரின் முக்கியத்துவத்தையும் அதன் பெருமையையும் உணர்த்துவன. தண்ணீர் இல்லாத ஒரு உலகை அல்லது வாழ்க்கையை நாம் நினைத்துக்கூட பார்க்கமுடியாது. இந்த பூமி உயிர்க்கோளம் என்பதற்கான அடிப்படை காரணிகளில் காற்றும்,நீரும்தான் முதன்மையானவைகள். காற்றும், நீரும் இல்லையெனில் உயிரினங்கள் எவையும் உயிர்வாழ முடியாது.

புவியின் அமிழ்தம்

தண்ணீரின் அருமையை சர்.சி.வி.ராமன் ஒரே வார்த்தையில் கூறியிருக்கிறார். தண்ணீர் இந்த புவியின் 'அமிழ்தம்' என்றார். அந்த அமிழ்தம் இல்லாத ஒரு வாழ்க்கையை சற்று எண்ணிப்பாருங்கள். தண்ணீரின் அருமையை கொரோனாவும் கற்றுக்கொடுத்துள்ளது. ஒரு 4 பேர் உள்ள குடும்பத்தின் தண்ணீர் தேவை மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது. சாதாரணமாக ஒரு சிறிய குடும்பத்திற்கு குளிப்பது மற்றும் பிற பயன்பாடுகள் என்று சுமார் 200 லிட்டர் வரை செலவாகும். ஆனால், கொரோனா பரவல் தொடங்கிய காலம் தொட்டு    தண்ணீரின் பயன்பாடு 3 மடங்காக உயர்ந்துள்ளதாக குடும்பத் தலைவிகள் கூறியுள்ளனர்.


3 மடங்கு அதிகரிப்பு

அதாவது, வீடுகளில்  எல்லா குடும்ப உறுப்பினர்களும்  இருப்பதாலும், வெளியில் செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டால் வீடு திரும்பியதும்  அணிந்திருந்த ஆடைகளை துவைத்தே ஆக வேண்டும் என்கிற நிலை. அடிக்கடி கை கழுவுதல், இரண்டு நாட்கள் போடவேண்டிய ஆடைகள் ஒருநாள் மட்டுமே போடும் நிலை. இவை எல்லாம் தண்ணீர் பயன்பாட்டை அதிகரித்துள்ளது. 

சாதாரண நாட்களில் 2 நாட்களுக்கு ஒரு ஆடை அணியும் நிலை மாறி, அன்று அணியும் ஆடைகளை  அன்றே துவைக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுப்பதற்கும் குடும்பத்தினரின் பாதுகாப்புக்காகவும் துணிகளை அடிக்கடி துவைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அடிக்கடி சோப்பு போட்டு கை கழுவுதலும் தண்ணீர் பயன்பாட்டை அதிகரித்துள்ளது.


சாதாரண நாட்களில்  4 பேர் கொண்ட குடும்பத்தின் தண்ணீர் தேவை:(ஒரு நபருக்கான தேவை கொடுக்கப்பட்டுள்ளது)

குளிப்பதற்கு 30 லிட்டர்.

துணிகள் துவைப்பது 30 லிட்டர்

மொத்தம் 60 லிட்டர் ஒரு நபரது தண்ணீர் தேவை. 

4 பேர் கொண்ட குடும்பத்திற்கு சுமார் 250 லிட்டர்.

இந்த தேவை தற்போது 4 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக குடும்பத் தலைவிகள் கூறுகின்றனர்.

ஆக, கொரோனா காலத்து தேவை 4 மடங்கு அதிகரித்திருப்பதால், ஒரு நாளைய தேவை 1000 லிட்டராக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர்.


கொரோனா தொற்று பரவலால் தண்ணீரின் தேவை அதிகரித்து அதன் பயன்பாடும் அதிகரித்திருக்கும் இக்கட்டான சூழலில் பல்வேறு தேவைகளும் அதிகரித்தே காணப்படுகிறது. பணத்தேவை, மின்தேவை போன்றவைகளும் அதிகரித்துள்ளதை நாம் காணமுடிகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பால் தொழில்கள் முடங்கிப்போய் இருந்தாலும் தேவைகள் குறையவில்லை. இன்னும் சொல்லப்போனால் தேவைகள் வழக்கத்தைவிட அதிகரித்துள்ளது என்பதே உண்மை.

தண்ணீர் இந்த புவியின் அமிழ்தம். தண்ணீரை வீணாக்காமல் முறையாக நாம் பயன்படுத்த வேண்டும்.

Tags:    

Similar News