பழுதடைந்த கொள்ளிடம் பாலத்தை கிராமத்து இளைஞர் ஒருவர் சுத்தம் செய்து சீரமைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொள்ளிடம் ஆற்றில் ஒருகிணைந்த நாகை மற்றும் கடலூர் ஆகிய இரு மாவட்டங்களையும் இணைக்கும் விதமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய பாலம் உள்ளது. இந்த பாலத்தில் நாள் தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கிறது.இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முறையான பராமரிப்பு இன்றி பாலத்தில் செடிகள் முளைத்தும், பாலத்தின் இடையே விரிசல் ஏற்பட்டும், அது மட்டுமின்றி சுமார் ஒரு கிலோமீட்டர் தூரம் உடைய பாலத்தில் இருபுறமும் உள்ள மின் விளக்குகள் எரியாமல் இரவு நேரத்தில் ஆபத்தான முறையில் பொதுமக்கள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த பாலத்தின் வழியாகத்தான் சென்னையில் இருந்து வரும் பொதுமக்கள் நாகை, காரைக்கால், கும்பகோணம் வேதாரண்யம், தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு செல்ல முடியும்.
இந்த பாலம் இல்லாவிடில் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் அணைக்கரை சென்று சுற்றிவர வேண்டும். பாலத்தை சீரமைக்க கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியபடுத்தி வருவதாக கூறி வல்லம்படுகை கிராமத்தை சேர்ந்த இளைஞரான ரமேஷ் என்பவர் தனது சொந்த செலவில் பாலத்தில் உள்ள குப்பைகள், செடிகளை அகற்றி மழைக்காலத்தில் தண்ணீர் பாலத்திலிருந்து வெளியேறக்கூடிய குழாய்கள் அடைப்புகளை நீக்கி பாலத்தில் தண்ணீர் தேங்காதவாறு தற்காலிக சீர் செய்து வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தினை போக்கியுள்ளார். அவரது இந்த செயல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.