தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு - தடுப்பூசி மையத்தை முற்றுகையிட்டு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

மதுரையில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அதிருப்தி அடைந்த பொதுமக்கள் தடுப்பூசி மையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Update: 2021-06-30 08:15 GMT

மதுரை அரசு மருத்துவமனை அருகே ஷெனாய்நகர் பகுதியில் உள்ள இளங்கோ மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசிகள் போடப்படாததை கண்டித்து பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

மதுரை அரசு மருத்துவமனை அருகே ஷெனாய்நகர் பகுதியில் உள்ள இளங்கோ மாநகராட்சி பள்ளியில் செயல்பட்டு வரும் கொரோனா தடுப்பூசி மையத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு டோக்கன் முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசிக்கான டோக்கன்கள் அதிகாலை வழங்குவதன் காரணமாக இன்று அதிகாலை 4 மணி முதல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நீண்ட நெடிய வரிசையில் சமூக இடைவெளி இன்றி குவிந்தனர். இந்நிலையில் திடீரென தடுப்பூசி இருப்பு இல்லை என பணியாளர்கள் கூறினர். ஆத்திரமடைந்த பொதுமக்கள் மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முறையான அறிவிப்பு இல்லாத நிலையில் பொதுமக்களை இப்படி அலைக்கழிப்பதா என கேள்வி எழுப்பினர். இதனை தொடர்ந்து பொதுமக்கள் அரசு மருத்துவமனை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தடுப்பூசிக்கான டோக்கன்கள் வழங்கப்பட்டது. ஆனால் எந்த தேதியில் தடுப்பூசி செலுத்தப்படும் என நிர்வாகம் தௌிவாக பதில் அளிக்காத நிலையில் பொதுமக்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.


Tags:    

Similar News