சந்நியாச தர்மங்களை ஆதினங்கள் பின்பற்றுகிறார்களா.. மதுரை எம்பிவெங்கடேசன் கேள்வி
ஆன்மீகத்தலைவர்கள் அரசியல் பேசினால் எதிர்வினை கருத்துகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டும் என்றார் மதுரை எம்பி வெங்கடேசன்
பிச்சை எடுத்துதான் சாப்பிட வேண்டும் என்ற சந்நியாச விதியை ஆதினங்கள் கடைபிடிக்கிறார்களா என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுயுள்ளார்.
நீர்நிலை - மற்றும் நத்தம் புறம்போக்கு நீர்வழி கரையோரம் நீண்டகாலமாக குடியிருக்கும் மக்களை வெளியேற்ற கூடாது எனவும், அம்மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்.மேலும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள மக்களுக்கு பத்திரம் மற்றும் பட்டா வழங்கிட வேண்டும், கோவில் நிலங்களில் நீண்ட காலம் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்,
இடியும் நிலையில் உள்ள மாநகராட்சி தொழிலாளர் குடியிருப்பில் வசிக்கும் மக்களுக்கு, வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வீடு கட்டிக் கொடுத்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பட்டா கேட்டு தமிழகம் முழுவதும் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், அக்கோரிக்கை தொடர்பாக மதுரை ஆட்சியரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மனு அளித்தார்.
தொடர்ந்து மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது: பல்வேறு வகைமை நிலங்களில் குடியிருப்போருக்கு குடியிருப்புகளை ஒதுக்க வேண்டும் என 5 ஆயிரம் மனுக்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆட்சியர் அதிகாரத்திற்குட்பட்டு முடிவெடுக்க வேண்டிய நில வகைகளில் விரைந்து முடிவெடுக்க கோரிக்கை விடுத்துள்ளேன்.
மதுரை ஆதினம் தனது உயிருக்கு ஆபத்து எனவும், பிரதமரையும், அமித் ஷாவையும் சந்திக்க இருப்பதாக பேசியது குறித்த கேள்விக்கு, ஆன்மீக தலைவர்கள் அரசியல் பேச களத்திற்கு வந்துவிட்டால் அரசியல் எதிர்வினை என்ற அடிப்படையில் பல்வேறு கருத்துகளை எதிர்கொள்ள வேண்டும்.
மடாபதிகள் மற்றும் ஆதினங்களுக்கு பல்வேறு பழக்க வழக்கங்கள், சம்பிராதயங்கள், சடங்குகள் உள்ளது. ஆனால் இதையெல்லாம் விட நாட்டின் அரசியல் சாசன சட்டம் மேலானது. அதற்கு மடாதிபதிகளும், ஆதினங்களும் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு தங்களை உட்படுத்திக்கொண்டு தான் எல்லா மடாதிபதிகளும் வந்துள்ளனர்.
சந்நியாசி தர்மப்படி சாதுக்கள் ஆதினங்கள் எங்கே போனலும் நடந்து தான் போக வேண்டும், ஒரு வேளை உணவு மட்டுமே சாப்பிட வேண்டும், அதையும் பிச்சையெடுத்து தான் சாப்பிட வேண்டும். அதனை ஓடும் நீரில் கழுவி சுவையில்லாமல் சாப்பிட வேண்டும் என்ரு உள்ளது. இதையெல்லாம் அவர்கள் பின்பற்றுகிறார்களா என்றால் இல்லை. அதை பின்பற்ற வேண்டும் எனவும் நாங்கள் கூறவில்லை. காலத்திற்கு ஏற்ப மாறி விட்டார்கள். எல்லோரும் மாறி கொண்டுள்ளனர். அதைத்தான் அரசும் சொல்கிறது. காலத்திற்கேற்ப மனிதனை மனிதன் தூக்கும் அடிமைத்தனம் மாற வேண்டும். பழமை வாதம் உதிரும் போது இந்தச்சப்தம் ஏற்படுவதாகவும், ஜனநாயகம் இந்த சப்ததங்களை மீறி வெற்றி பெறும் என்றார் எம்பி வெங்க\டேசன்.