மதுரை முதல் தேனி வரை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்

மதுரை முதல் தேனி செல்லும் சிறப்பு ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.;

Update: 2022-05-31 07:00 GMT

மதுரை-தேனி சிறப்பு ரயில்.

மதுரை-தேனி ரயில் சேவை 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் அண்மையில் துவங்கப்பட்டது. கம்பம், போடிமெட்டு, இடுக்கி பகுதிகளில் விளையக்கூடிய ஏலக்காய், மிளகு, பஞ்சு மற்றும் மூலிகை பொருட்களை சந்தைப்படுத்துவதற்காக ஆங்கிலேயர் காலத்தில் 1928ம் ஆண்டு போடி - மதுரை இடையே குறுகிய பாதையில் ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.

காலப்போக்கில் பயணிகள் ரயிலாக மாற்றப்பட்ட நிலையில் 1954ம் ஆண்டு குறுகிய பாதை - மீட்டர் கேஜ் ரயில் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர், மீட்டர் கேஜ் பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக மாற்றம் செய்வதற்காக 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

மதுரை - போடி இடையே 98 கி.மீ. தூரத்திற்கு அகல பாதையாக மாற்றம் செய்யும் பணிகள் போதிய நிதி ஒதுக்காத காரணத்தால் சுணக்கம் ஏற்பட்டது. மக்களின் தொடர் கோரிக்கைகள் காரணமாக ரூ.506 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.

அதன் மூலம், முதற்கட்டமாக மதுரை - தேனி இடையே 75 கிமீ தூரத்திற்கு அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு உள்ளது. தேனி - போடி இடையேயான பணிகள் நடைபெற்று வருகின்றன. 11 ஆண்டுகள் நடைபெற்ற பணிகள் நிறைவுற்று 2022 மே 26ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார்.

இந்த ரயில் மதுரையில் இருந்து தேனி செல்லும் பஸ் பயண நேரத்தை விட குறைவாகவும், கட்டணம் குறைவாகவும் இருந்தது. தென்னக ரயில்வே அட்டவணைப்படி காலை 8.30 மணிக்கு 12 பெட்டிகளுடன் கிளம்பிய பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிபட்டி, நிறுத்தங்களில் நின்று காலை 09.35 மணிக்கு தேனியை வந்தடைந்தது.

அதே போல் மாலை 6.15 மணிக்கு தேனியில் இருந்து கிளம்பும் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரயில் ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, வடபழஞ்சி நிறுத்தங்களில் நின்று மாலை 07.35 மணிக்கு மதுரை சென்றடைந்தது. இந்நிலையில் மதுரை - தேனி ரயில் கால அட்டவணை நாளை (புதன்கிழமை) முதல் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. புதிய அட்டவணைப்படி இந்த சிறப்பு ரயில் (வ.எண்.06701) மதுரையில் இருந்து காலை 8.30 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 25 நிமிடங்கள் முன்னதாக காலை 8.05 மணிக்கு புறப்பட்டு காலை 9.35 மணிக்கு தேனி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் தேனியில் இருந்து புறப்படும் ரயில் (வ.எண்.06702) தேனியில் இருந்து மாலை 6.15 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு பதிலாக இரவு 7.50 மணிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக மதுரை ரயில் நிலையம் வந்து சேரும். இந்த ரயில் வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டும் நின்று செல்கிறது. இருப்பினும் கூடுதல் நேரம் எடுத்து கொள்ளப்படுகிறது.

Tags:    

Similar News