கழிவுநீர் கிணற்றில் தொழிலாளர்களை இறங்கச் செய்து தேர்வு: மதுரை மாநகராட்சி மீது குற்றச்சாட்டு

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி மதுரை மாநகராட்சியில் கழிவுநீர் கிணற்றுக்குள் தொழிலாளர்களை இறங்கச் செய்து தேர்வு நடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.;

Update: 2021-11-17 05:30 GMT

மதுரை மாநகராட்சி அலுவலகம்.

மதுரை மாநகராட்சி மண்டலம் 2ல், கழிவுநீர் நீரேற்று நிலையங்களில் பணிபுரிய தொழிலாளர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டது. முன்னதாக துப்புரவு நிலையங்களில் பணிபுரியும் உடலுழைப்பு தொழிலாளர்கள் கோ.புதூர் நகரில் உள்ள மாநகராட்சி கழிவுநீர் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அங்கு கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

அப்போது கழிவுநீர் நீரேற்று நிலையத்தில் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, கிணற்றுக்குள் உள்ள கழிவுகளை மேலே கொண்டு வர வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் கிணற்றிலிருந்து அதற்குரிய கையுறை காலணி உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதில் ஆபத்தான முறையில் உயிரை பணயம் வைத்து கிணற்றில் இறங்கி கழிவுகளை கொண்டு வந்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் இந்த தேர்வு உச்சநீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் சட்ட விரோதமாக நடத்தப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம் கேட்டபோது கிணற்றுக்குள் தொழிலாளர்கள் இறங்கி தேர்வு நடத்தியது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News