பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கி கார் பரிசு பெற்ற பிரபாகரன்
மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் 14 காளைகளை அடக்கிய வீரர் பிரபாகரனுக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்தாலும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் தான் உலக அளவில் பேசப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவடைந்தது. 847 காளைகள் வாடி வாசலை தாண்டிய நிலையில் பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 3 நாட்கள் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். இந்த ஆண்டு முதல் நாளாக அவனியாபுரத்தில் நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. மதுரை பாலமேட்டில் இன்றைய தினம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு அங்குள்ள மஞ்சள் மலையாற்றில் காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. வாடி வாசலை தாண்டிய காளைகளை வீரர்கள் உற்சாகமாக விரட்டி பிடித்தனர். சில காளைகள் தொட்டுப்பார் என்று களத்தில் நின்று விளையாடின. சில காளைகள் யார் கைகளுக்கும் சிக்காமல் ஓடின. அந்த காளைகளுக்கு தங்கக் காசுகள் பரிசளிக்கப்பட்டன.
இன்றைய தினம் 10 சுற்றுகள் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 847க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்க்கப்பட்டன. 485 வீரர்கள் பங்கேற்றனர். காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. பொதும்புவை சேர்ந்த பிரபாகரன் என்ற வீரர் 14 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.
கடந்த 2020, 2021, 2022ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி பிரபாகரன் முதலிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே வேண்டுகோள் விடுத்தவர் பிரபாகரன்.
சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் 11 காளைகளை அடக்கி இரண்டாம் இடத்தையும், 8 காளைகளை பிடித்த கொந்தகை பாண்டீஸ்வரன் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.வாடிவாசலை தாண்டிய பல காளைகள் யார் கைகளிலும் சிக்கலாமல் ஓடினாலும் சில காளைகள் களத்தில் நின்று விளையாடின. இதில் நீண்ட நேரம் நின்று தொட்டுப்பார் என்று சொல்லி வீரர்களுக்கு மரண பயத்தை காட்டிய புதுக்கோட்டை ராக்கெட் சின்னகருப்பு காளை தேர்வாகி காரை பரிசாக வென்றது.
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 14 பேர், மாட்டின் உரிமையாளர்கள் 14 பேர் மற்றும் பார்வையாளர்கள் 9 பேர், காவலர்கள் மூன்று பேர் என இப்போட்டியில் 40 பேர் காயமடைந்தனர். போட்டியில் பங்கேற்ற காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறும் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த டிஎஸ்பி விஜயராஜை காளை ஒன்று முட்டியது. இதில் காயம் அடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நேற்று அவனியாபுரத்திலும் இன்று பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளைய தினம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.