கால்நடை மருத்துவமனைகளில் மருந்து வைப்பு குளிர்சாதனப்பெட்டி இயங்கவில்லை என புகார்
மதுரை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு கால்நடை மருத்துவமனைகளில் மருந்து வைப்பு குளிர்சாதன பெட்டி இயங்கவில்லை;
பைல் படம்
மதுரை கால்நடை மருத்துவமனைகளில் மருந்துகள் குளிர்சாதன அறைகள் மற்றும் பெட்டிகள் இயங்கவில்லை என மாடு வளர்ப்போர் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மதுரை மாவட்டம் மற்றும் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் கால்நடை மருத்துவமனைகளில் மருந்து வைக்கும் அறைகள் குளிர்சாதனப் பெட்டிகள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் உள்ளது தமிழகத்தில் தற்போது கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்தப்படும் நிலையில், மதுரை உட்பட பெரும்பாலான மாவட்ட கால்நடை மருத்துவமனைகளில் மருந்துகள் இருப்பு வைக்கும் வாக்கின் கூலர் என்ற குளிர்சாதன அறைகள் குளிர்சாதனப் பெட்டிகள் இயங்காமல் வீணாகக் கிடக்கிறது .
இதுகுறித்து ஓராண்டாக தலைமை அலுவலகத்துக்கு தகவல்கள் அனுப்பியும் பலனில்லை. கால்நடை தடுப்பூசி மருந்து இருப்பு வைக்க பயன்படும் குளிர்சாதன அறை பாதுகாப்பு பெட்டிகள் இயங்காததால், தடுப்பூசி சேமித்து குறித்த நேரத்தில் எடுத்து பயன்படுத்த முடியவில்லை. மாவட்ட தலைமை இடத்தில் உள்ள மொத்த தடுப்பூசி மருந்துகளும் அங்கு உள்ள குளிர்சாதன அறையில் வைக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து வட்ட வாரியாக சில கால்நடை மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்று அங்குள்ள குளிர்சாதன பெட்டிகளில் இருப்பு வைக்கப்படும்.
ஆனால், பெரும்பாலான இடங்களில் செயலற்ற நிலையில் தான் உள்ளது. இதனால் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் தடுப்பூசி மருந்துகளை தங்கள் வீட்டில் கால்நடை மருந்தக குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்துச் செல்கின்றனர். இதை சரி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்தாததால் கால்நடை பணியாளர்கள் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர் என துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மதுரை மண்டல மதுரை மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் நடராஜ குமார் கூறியதாவது மதுரை மண்டலத்தில் எழுபத்தி ஆறு இடங்களில் குளிர்சாதனப் பெட்டிகள் செயல்படுகிறது. 10 இடங்களில் பழுதான பெட்டிகள் பழுது நீக்கப்படும். மதுரை மருத்துவமனை குளிர்சாதன அறையில் பழுதாகியுள்ள கருவிகளை புதிதாக மாற்ற வேண்டுமென கேட்டுள்ளோம். தற்போது திருமங்கலம் கால்நடை மருத்துவமனையில் குளிர்சாதன அறையில் மருந்துகள் இருப்பு வைக்கப்படுகிறது என்றார்.தமிழக அரசு தானாக முன்வந்து விவசாயிகள் மற்றும் மாடு வளர்ப்போர் வாழ்வாதாரம் காக்கும் வகையில் கால்நடை மருத்துவமனை குளிர்சாதன அறைகளை அமைத்து தருமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்